ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்: நீதிபதி சுட்டுக்கொலை

காபூல்,  ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெரட் மாகாணத்தில் உள்ள இன்ஜில் மாவட்ட முதன்மை கோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அப்துல் ரகீம் அஷிமி. இவர் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இதனால் இவரது உயிருக்கு தலீபான் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்து வந்தது.

இந்த நிலையில், அப்துல் ரகீம் அஷிமி, நேற்று முன்தினம் இரவு கோர்ட்டில் இருந்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் அவரது காரை வழிமறித்து, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இதில் அப்துல் ரகீம் அஷிமி காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார். இதற்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காந்தஹார் மாகாணத்தில் உள்ள தாண்ட் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேரை தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

dailythanthi