மருத்துவர்: குதத்திற்குள் பிளாஸ்டிக் நுழைக்கப்பட்டதாக சைபுல் என்னிடம் சொன்னார்

பிளாஸ்டிக் பொருள் ஒன்று தமது குதத்திற்குள் நுழைக்கப்பட்டதாக புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் தெரிவித்தார் என இன்று இரண்டாவது பிரதிவாதித் தரப்புச் சாட்சியான புஸ்ராவி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் முகமட் ஒஸ்மான் அப்துல் ஹமிட் இன்று கூறினார்.

தமது மருத்துவ அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர் முகமட் யூசோப் ஜைனல் அபிடின் பல முறை கேள்வி எழுப்பிய போது முக்கியப் பிரமுகர் ஒருவரால் தாம் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டதாக சைபுல் கூறியதை டாக்டர் ஒஸ்மான் ஒப்புக் கொண்டார். என்றாலும் தமது குதத்திற்குள் பிளாஸ்டிக் பொருள் ஒன்று நுழைக்கப்பட்டது என்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் சொன்னதாகவும் டாக்டர் ஒஸ்மான் குறிப்பிட்டார்.

அந்த சாட்சி பர்மாவைச் சேர்ந்தவர். யங்கூன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி கற்றவர். இன்னொரு நேரத்தில் “குதத்தில் பிளாஸ்டிக் பொருள் நுழைக்கப்பட்டது” எனத் தாம் எழுதியதாக சொலிஸிட்டர் ஜெனரல் II கூறியதை அந்த மருத்துவர் வன்மையாக மறுத்தார்.

2008ம் ஆண்டு ஜுன் மாதம் 28ம் தேதி சைபுல் புஸ்ராவிக்கு வந்ததாக அவர் விளக்கினார். சைபுல் தமது குதத்தில் வலிப்பதாக புகார் செய்தார் என டாக்டர் ஒஸ்மான் சொன்னார்.

சோதனை நடத்திய பின்னர், அந்தப் பகுதியில் ரத்தக் கசிவோ, கிழிசலோ ஏதுமில்லை என்பதைத் தாம் கண்டதாக அவர் குறிப்பிட்டார். அப்போது தமது குதத்திற்குள் பிளாஸ்டிக் பொருள் ஒன்று நுழைக்கப்பட்டதின் மூலம் தாம் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த நோயாளி கூறிக் கொண்டார் என்றும் டாக்டர் ஒஸ்மான் தெரிவித்தார்.

சைபுலைச் சோதித்த பின்னர் அவர் என்னிடம் அதனைத் தெரிவித்ததை பதிவு செய்ததாகவும் சோதிப்பதற்கு புரோட்டோ ஸ்கோப் ஒன்றை நுழைத்ததாகவும்  அவர் சொன்னார்.

யூசோப்பின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த டாக்டர் ஒஸ்மான், பிளாஸ்டிக் பொருள் ஒன்றை நுழைப்பது குதப்புணர்ச்சி அல்ல எனச் சொன்னார். அந்த மருத்துவக் குறிப்புக்கள் பின்னர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.