இந்தியர்களின் நலனைக் காக்கும் அரசாங்கம் வேண்டும் – சார்ல்ஸ்

பக்காத்தான் ராக்யாட் அளித்திருக்கும் உறுதிமொழிகள் அரசியல் தந்திரமானால் 53 ஆண்டு காலமாக தே.மு அரசாங்கம் அளித்து வரும்  உறுதி மொழியை என்னவென்று சொல்வது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி இந்தியர்களின் நலம் பாராமல் இருந்த ஒரே காரணத்தால்தான் 2008-ல் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதனை டாக்டர் சுப்பிரமணியம் மறந்து விடக்கூடாது என அறிவுறுத்திய சார்ல்ஸ்; அரசாங்கம் என்பது மக்களின் நலனைக் காக்க வேண்டும் என கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்திற்கும் மேம்பாட்டிற்கும் 235 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக கூறும் மனித வளத்துறை அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம், எந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது எனும் தரவுகளை தரமுடியுமா? என கேள்வி எழுப்பினார் சார்ல்ஸ்.

இந்தியர்களின் தீரா பிரச்னைகளில் குடியுரிமை, அடையாள அட்டை மற்றும் பிறப்புப் பத்திரம் போன்றவை முக்கியமானதாகும். 40௦௦௦ இந்தியர்கள் இப்பிரச்னைகளில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர் என்பதால் மை டஃப்தார் பதிவை ஏற்பாடு செய்த முயற்சி பாராட்டத்தக்கது.

ஆயினும் இப்பதிவின் வழி 9000  பேரின் ஆவணப் பிரச்னைகளை அரசாங்கம் வெற்றிகரமாக  தீர்த்து விட்டதாக அண்மையில் அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் கூறியிருந்தார். அதேவேளை, கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 6541 இந்தியர்கள் மை டஃப்தார் பதிவில் தங்களை பதிந்துகொண்டுள்ளதாக நாடாளுமனறத்தில் அமைச்சர் தகவல் அளித்திருந்தார்.

அப்படியானால், இந்த எண்ணிக்கை மேற்குறிப்பிட்ட 9000 பேரில் அடங்குமா இல்லை, தனி எண்ணிக்கையா? அப்படியானால் உண்மையில் எத்தனை இந்தியர்களின் பிரச்னைகளை அரசாங்கம் தீர்த்து உள்ளது?

400 எஸ்.பி.எம் மாணவர்களுக்கு அரசாங்கம் எவ்வளவு கடனுதவி வழங்கியது? “மை ஜோப்” (என் வேலை) திட்டத்தின் வழி எத்தனை இந்தியர்கள் பயனடைந்துள்ளனர்? இப்படி அரசாங்கம் வரையும் திட்டகள் உண்மையில் எந்த வகையில் நமது இந்தியர்கள் பயனடைகின்றனர் என்பது தான் இங்கு எழும் கேள்வியே.

மக்களின் நலன் காக்க விரும்பும் அரசாங்கம் திட்டங்களை வகுத்தால் மட்டும் போதாது. அத்திட்டம் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என கேட்டுக் கொண்ட சார்ல்ஸ் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டங்களையும் மக்கள் அடையும் பலன்களையும் சுட்டிக் காட்டினார்.

அதில், இலவச தண்ணீர், மூத்த குடிமக்களுக்கான நிதியுதவி ( மெஸ்ர உசியா எமாஸ்) , 100 வெள்ளி பெறுமானமுள்ள ஷாப்பிங்  பற்றுச் சீட்டு, குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் (தாவாஸ்),   கல்லூரி மாணவர்களுக்கான ரிம 1500  பணம், வட்டியில்லா  சிறுதொழில் கடனுதவி( மிம்பார்), பெண்களுக்காக  இலவச முலை ஊடுகதிர்ப்படம் சோதனை (மமொக்ரம்) என பல உதவிகளின் வழி மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அவ்வரிசையில் நமது இந்தியர்களும் அடங்குவர் என்பதனை அவர்  நினைவுறுத்தினார்.

அராசங்கம் என்பது மக்களின் நலனை காக்க வேண்டும். குறிப்பாக மலேசியாவில் இந்தியர்களின் நலனை காக்கும் அரசாங்கமே நிலைத்து நிற்க முடியும். அது மக்களின் கையில் உள்ளது. நமது தலையெழுத்தையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் நிர்ப்பந்த்ததில் நாம் உள்ளோம். ஆக, மக்கள் குறிப்பாக இந்தியர்கள் நன்கு சிந்தித்து சீர்தூக்கி பார்த்து முடிவெடுக்க வேண்டும் என சார்ல்ஸ் கேட்டுக்கொண்டார்.