தலிபான் தலைவர்களை சந்திக்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்; ”தலிபான் தலைவர்களை விரைவில் சந்திப்பேன்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அல் – குவைதா பயங்கரவாத அமைப்பினர், 2001, செப்., 11ல், அமெரிக்காவில் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து, அல் – குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா முயன்றது. அல் – குவைதாவுக்கு உதவிய, தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தது.அப்போது ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அதையடுத்து, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள், ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டன. தலிபான் ஆதிக்கம், ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால், தலிபான்கள் மீண்டும் வலுப்பெற்று, அமெரிக்க படைகளுக்கு எதிராக போர் புரிந்து வந்தனர்.கடந்த, 19 ஆண்டுகளாக இந்தப் போர் நடந்து வந்தது. அதையடுத்து, ‘ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும். இது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சு நடத்தப்படும்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 2018ல் அறிவித்தார்.பல கட்டங்களாக நடந்த பேச்சை தொடர்ந்து, தலிபான் மற்றும் அமெரிக்கா இடையே, நேற்று முன்தினம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, அடுத்த, 14 மாதங்களுக்குள், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும்.நம்பிக்கை உள்ளதுஇந்த ஒப்பந்தம் குறித்து, டொனால்டு டிரம்ப் கூறியதாவது:அமெரிக்க வரலாற்றில், மிக நீண்ட காலம் நடந்த போராக இது அமைந்து விட்டது. நமது வீரர்கள், சட்டம் – ஒழுங்கை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது, தேவையில்லாத ஒன்று. அவர்கள் உலகின் மிகச் சிறந்த போர் வீரர்கள். அதனால், அமெரிக்க படைகளை விலக்கி கொள்ள, தலிபான்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை கொல்வதில், நம் வீரர்கள் அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர். நம் படைகள் வெளியேறினாலும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை அங்கு தொடரும் என்று நம்புகிறேன். அதை தலிபான்கள் மேற்கொள்வர் அல்லது அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள், ஆப்கானிஸ்தானுக்கு உதவும்.ஒப்பந்தத்தின்படி, நம் வீரர்களை திரும்பப் பெறுவோம்.

அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகாவிட்டால், நாங்கள் திரும்பவும் வருவோம். அதற்கு தேவை இருக்காது என்று நம்புகிறேன். தலிபான்கள் அதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.மிக விரைவில் தலிபான் தலைவர்களை சந்திக்க உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

அதிபர் நம்பிக்கை

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கூறியுள்ளதாவது:இந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன், ஏழு நாட்களுக்கு வன்முறைகளை நிறுத்தி வைக்க, அமெரிக்கா மற்றும் தலிபான்கள் முன் வந்தனர். அது தொடரும் என்று நம்புகிறேன். அதன் பின், போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்படும்.அதே நேரத்தில், சிறையில் உள்ள பயங்கரவாதிகளை விடுதலை செய்வதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

பெண்கள் அச்சம்
கடந்த, 2001ல், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தன. அதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள், தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்தது. மத பழமைவாதிகளான தலிபான்கள், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தனர். பெண்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை மறுக்கப்பட்டன.தற்போது தலிபான்களுடன், அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அரசுடன், அமைதி பேச்சை, தலிபான்கள் தொடருவார்கள். மீண்டும் பழைய கட்டுப்பாடுகள் வருமோ என்ற அச்சத்தில், பெண்கள் உள்ளனர்.

dinamalar