சிரியாவில் நடைபெற்றுவரும் போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான இட்லிப் மாகாணத்தை கிளர்ச்சியாளர்களிடமிருந்து கைப்பற்றும் நோக்கில் சிரிய படைகள் அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறது.
இந்த சண்டையில் சிரியாவுக்கு ரஷிய படைகள் ஆதரவு அளிக்கிறது. அதேபோல் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி அரசு ஆதரவு கொடுக்கிறது. மேலும், சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தனது ராணுவத்தை குவித்துவைத்துள்ளது.
இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ரஷியா ஆதரவு பெற்ற சிரிய படைகள் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த இட்லிப் பகுதியில் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து நேற்று துருக்கி படைகள் நடத்திய தாக்குதலில் 17 சிரிய படையினர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சிரியாவின் இட்லிப் மற்றும் அலிப்போ மாகாணங்களில் உள்ள சிரிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் துருக்கி இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 26 பேர் உயிரிழந்தனர்.
துருக்கியின் இந்த தாக்குதலுக்கு ரஷியாவின் உதவியுடன் சிரியா பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிரியா – துருக்கி நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.
maalaimalar