ஆப்கானிஸ்தான் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என அதிபர் அஷ்ரப் கானி அறிவித்துள்ளார்.
காபுல்: ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டில் இருந்து அரசுப் படைகள் மற்றும் தலிபான்கள் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவும், தலிபான் பயங்கரவாத அமைப்பும் ஒப்புதல் அளித்தன.
சமீபத்தில் அங்கு ஒரு வார காலம் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது.
இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இதன்மூலம் 20 ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் தலிபான் கைதிகளை விடுதலை செய்யும் பொறுப்பை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இன்று தெரிவித்துள்ளார்.
தலைநகர் காபுலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஷ்ரப் கானி, ‘கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வாக்குறுதி அமெரிக்காவால் அளிக்கப்படக் கூடியதல்ல. இது தொடர்பான எனது அரசுத்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்குள் கைதிகளை விடுதலை செய்ய நான் தயாராக இல்லை.
தலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா தரப்பில் இருந்து எங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையின் ஒருபகுதியாக வேண்டுமானால் இந்த கோரிக்கை இருக்கலாம். ஆனால், இதை முன்நிபந்தனையாக எங்களிடம் வலியுறுத்தக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.
maalaimalar