“அம்னோவுக்கு பக்காத்தான் பதிலடி”

பக்காத்தான் கட்டுக்குள் உள்ள மாநிலங்களை மீண்டும் கைப்பற்றப் போவதாக சூளுரைக்கப்பட்டு போர் முரசு கொட்டப்பட்ட அம்னோ பொதுப் பேரவை முடிந்த மறு நாள், எதிர்க்கட்சிகளும் பதில்  தாக்குதலை தொடங்கியுள்ளன.

சிலாங்கூரைப் பக்காத்தான் தக்க வைத்துக் கொள்வதோடு அந்த மாநிலத்தில் தேர்தலில் கூடுதல் இடங்களையும் பெறும் என ஷா அலாமில் நேற்றிரவு ஐயாயிரம் பேர் பங்கு கொண்ட பேரணியில் பேசிய பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் முழங்கினார்.

“சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்கிறார். ஆனால் அவர் சிலாங்கூர் பற்றித் தொடர்ந்து கனவு காணலாம்- நாங்கள் புத்ராஜெயாவையும்  கைப்பற்றுவோம்”, என அவர் சொன்னார்.

பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் மலாய்க்காரர்களைப் பாதுகாக்கும் கட்சியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயலும் அம்னோவின் நடத்தைகளை அவர் எடுத்துரைத்தார்.

“அம்னோ மலாய்க்காரர்களை பாதுகாக்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா? அவர்களுக்கு  மலாய்க்காரர்களைப் பாதுகாக்கும் எண்ணம் இருந்தால் மலாய் நிலத்தை விற்க மாட்டார்கள்.”

“கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள கடைசி மலாய் கோட்டை (கம்போங் பாரு). அவர்கள் (அரசாங்கம்) கம்போங் பாரு மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் அதனை (கூட்டரசுப் பிரதேச அமைச்சர்) ராஜா நோங் சிக்-கிடம் கொடுக்க விரும்புகின்றனர்.”  

அந்தப் பேரணியில் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்-கும் பேசினார். அம்னோ பொதுப் பேரவையில் தமது கட்சி மீது தொடுக்கப்பட்ட இடைவிடாத தாக்குதல்களை அவர் முறியடித்தார்.

“அவர்கள் (அம்னோ) டிஏபி இஸ்லாமிய எதிர்ப்புக் கட்சி எனக் குற்றம் சாட்டுகின்றனர். அது உண்மையா?” என லிம் வினவினார். அதற்கு “இல்லை” என கூட்டத்தினர் முழக்கமிட்டனர்.

அடுத்து அவர் தமது கட்சிக்கு எதிராக அம்னோ சுமத்திய பழிகள் ஒவ்வொன்றையும் முன் வைத்தார்.  ஒவ்வொன்றுக்கும் “இல்லை” என கூட்டத்தில் இருந்தவர்கள் பதில் அளித்தனர்.

கூட்டரசு சமயமாக இஸ்லாத்தையும் அரசமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சி முறையையும் தமது கட்சி ஏற்றுக் கொள்வதாக லிம் மீண்டும் வலியுறுத்தினார். அவர் அளித்த அந்த வாக்குறுதியை அந்தக் கூட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த மலாய்க்காரர்கள் கைதட்டி வரவேற்றனர்.

அந்தப் பேரணியில் பேசிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், என்எப்சி ஊழலில் சிக்கிக் கொண்டுள்ள ஒரு தலைவரை அம்னோ பேராளர்கள் வெளிப்படையாக ஆதரிப்பதாக கிண்டலாக கூறினார். உள்நாட்டில் மாட்டிறைச்சி விநியோகத்தில் முதன்மை பெறுவது அந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

“பாஸ், டிஏபி-யின் பொதி சுமக்கும் குதிரை என அம்னோ சொல்கிறது.  ஆனால் அம்னோ மக்களை ( memper-lembu-kan ) முட்டாளாக்க முயலுகிறது. குதிரைகள் போருக்குச் செல்ல வேண்டும். ஆனால் மாடுகள் அறுப்புக் கூடத்துக்கு செல்ல வேண்டும்,” என அவர் புன்னகையுடன் கூறினார்.

“நாங்கள் நல்ல சாதனைகளைப் புரிந்துள்ளோம்”

பக்காத்தான், அம்னோ விடுத்த தேர்தல் செய்திகளை முறியடித்ததுடன் சிலாங்கூரில் நம்பிக்கையான, ஆற்றல் மிக்க அரசாங்கமாக திகழ்வதையும் எடுத்துக் காட்டியது.

“அந்த மாநிலத்தை பக்காத்தான் எடுத்துக் கொண்ட பின்னர் அதன் வருமானம் கணிசமாக கூடியுள்ளது. ஆனால் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் தமது மனைவிக்கு வைர மோதிரம் வாங்கிக் கொடுத்ததை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?” என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி வினவினார்.

“முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் (டாக்டர் முகமட்) கிர் தோயோவிப் போல ஆடம்பர மாளிகையைக் கட்டுவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?”

அஸ்மினைத் தொடர்ந்து பேசிய காலித், சிலாங்கூரில் இதுகாறும் அமலாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். மாநில அரசாங்கம் நிதிகளை விவேகமான முறையில் நிர்வாகம் செய்வதாகவும் அவர் சொன்னார்.

“சிலாங்கூர் மூத்த குடி மக்களுக்கு ‘Jom Shopping’ என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது. பொருட்களை வாங்குவதற்கு நாங்கள் அவர்களுக்கு 100 ரிங்கிட் பற்றுச் சீட்டு கொடுத்தோம். அதனைப் பின்பற்ற முயன்ற கூட்டரசு அரசாங்கம் மூத்த குடிமக்களுக்கு அன்பளிப்புக் கூடைகளை வழங்குகிறது.”

“பேரங்காடிகளில் உள்ள என்னுடைய தொடர்புகளுடன் அந்த விஷயத்தைச் சோதனை செய்தேன். அது கொடுக்கும் ஒவ்வொரு 100 ரிங்கிட் அன்பளிப்புக் கூடைக்கும் கூட்டரசு அரசாங்கம் 200 ரிங்கிட் செலவு செய்வதாகத் தெரிய வந்தது. நாங்கள் எங்கள் திட்டத்தில் நீங்கள் 100 ரிங்கிட் மட்டுமே செலவு செய்ய வேண்டும். நீங்கள் 115 ரிங்கிட்டை செலவு செய்தால் நான் அந்த அதிகாரியை உடனடியாக நீக்கி விடுவேன்.”

மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் விவசாய விழாவுக்கு மத்தியில் அந்தப் பேரணி நடைபெற்றது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

அன்றிரவு அந்த இடம் கோலாகலமாக இருந்ததுடன் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்தையிலும் மக்கள் நிறையக் காணப்பட்டனர். “நாங்கள் ஆட்சி புரிவதுடன் சிறந்துவிளங்கவும் முயலுகிறோம்”, என அன்வார் கூறிய சொற்றொடரை பக்காத்தான் தலைவர்கள் வலியுறுத்த முயன்றனர்.

அந்த நிகழ்வில் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், தேசிய இலக்கியவாதியான ஏ சாமாட் சையட், சிலாங்கூரைச் சேர்ந்த பல ஆட்சிமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

TAGS: