அமெரிக்காவை விமர்சித்த மசூத் அசார் இடம் மாற்றம்

இஸ்லாமாபாத் : அமெரிக்காவை விமர்சித்த ஜெய்ஷ் – இ – முகமது தலைவர், மசூத் அசார், பாதுகாப்பு காரணங்களுக்காக, ராவல்பிண்டிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு, காஷ்மீரின், புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.அந்த தாக்குதலுக்கு, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

 இப்படி, இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்திய அந்த அமைப்பின் தலைவர், மசூத் அசாரை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச பயங்கரவாதியாக, கடந்த ஆண்டு அறிவித்தது.இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில், அமெரிக்க கொள்கையை விமர்சித்து, மசூத் அசார், சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.அதில், ‘அமெரிக்கா, ஆப்கனில் ஓநாயைப் போல அலைந்து திரிந்தது. தற்போது, அதன் வால் அறுக்கப்பட்டுவிட்டது’ என கூறியிருந்தார்.மசூத் அசாரின் அந்த அறிக்கை, அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்தது. இதனால், பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் தலைமையகத்தில், அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என, கருதப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச், 3ம் தேதி, மசூத் அசார், பஹவல்பூர் தலைமையகத்தில் இருந்து, ராவல்பிண்டிக்கு, பாக்., ராணுவத்தால் இடம் மாற்றப்பட்டுள்ளார்.பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.கடந்த மாதம், பிரான்சில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி நடவடிக்கை பணிக் குழுவின் கூட்டம் நடந்தது. அதில், மசூத் அசார், குடும்பத்துடன் காணாமல் போய்விட்டதாக, பாக்., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாக்., ராணுவத்தின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவை கோபமடையச் செய்துள்ளது.

dinamalar