கொரோனா கோர தாண்டவம்

உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது.

உலகில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிடுகிறது உலக சுகாதார நிறுவனம். அவற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த தொற்றுகள், மரணங்கள் மற்றும் முந்தைய 24 மணி நேரத்தில் நிகழ்ந்த தொற்றுகள், இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

மத்திய ஐரோப்பிய நேரப்படி மார்ச் 21 நள்ளிரவு 11.59க்கு வெளியிடப்பட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் 26,069 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதே காலத்தில் 1,600 பேர் இந்த நோயால் இறந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,600 பேர் மரணம் என்பது இந்த கொரோனா வைரஸ் சிக்கல் உலகில் தோன்றியதில் இருந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

புதிதாக நோய் தொற்றியோர் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருந்தாலும், இது முந்தைய நாளைவிட சற்றே குறைவு ஆகும்.

மார்ச் 20 தேதியிட்ட முந்தைய அறிக்கைப்படி முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக நோய்த் தொற்றியவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரமாக இருந்தது. ஆனால், ஒரே நாள் புள்ளிவிவரத்தை வைத்து புதிதாக நோய்த் தொற்றுகிறவர்கள் எண்ணிக்கை மட்டுப்படத் தொடங்கிவிட்டதாக முடிவுக்கு வர முடியுமா என்பது சந்தேகமே.

ஒட்டுமொத்த தொற்று, இறப்பு

இதுவரை உலகில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற தகவல்களைப் பொறுத்தவரை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளிக்கும் புள்ளிவிவரப்படி இந்திய நேரப்படி இன்று காலை 7:13 வரை உலகில் 3,35,997 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 98,333 பேர் குணமடைந்துவிட்டனர். 14,641 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

சீனாவில் தொற்று தொடங்கியது முதல் இதுவரையிலான புள்ளிவிவரம் இது.

இந்தியாவை பொறுத்தவரை, இதுவரை கொரோனா வைரஸால் 396 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலகில் 173 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தொற்று ஏற்பட்டிருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனம் 187 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆனால், உலக சுகாதார நிறுவனக் கணக்குப்படி இதுவரை தொற்று ஏற்பட்டிருப்பவர்கள் எண்ணிக்கை: 2,94,110; இறந்தவர்கள் எண்ணிக்கை: 12,944.
கொரோனாவின் கோரப் பிடியில் இத்தாலி, அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய சீனா புதிய தொற்றுகளை, இறப்புகளை ஏறத்தாழ முழுவதும் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், இத்தாலி தொடர்ந்த கொரோனா தாக்குதலின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரப்படி, இதுவரை இத்தாலியில் 59,138 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களில் 5,476 பேர் இறந்துள்ளனர். 7,024 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு அதிகம் பேரை பலி கொடுத்த நாடாக இத்தாலி இருக்கிறது.

தொடக்கத்தில் கொரோனா தொற்று பெரிய அளவில் ஏற்படாமல் இருந்த அமெரிக்காவில் திடீரென கடந்த சில நாள்களாக புதிய தொற்றுகளின் எண்ணிக்கை சீறிப்பாயத் தொடங்கியுள்ளது. இப்போது சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. இதுவரை அந்த நாட்டில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை: 32,276. அமெரிக்காவில் இந்த தொற்றால் இதுவரை 417 பேர் இறந்துள்ளனர்.

10 ஆயிரம் பேருக்கு மேல்…

சுமார் 10 நாள்கள் முன்புவரை 1,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றிய நாடுகளின் பட்டியலில் 8-9 நாடுகளே இருந்த நிலையில் இப்போது 10 ஆயிரம் பேருக்கு மேல் நோய் தொற்றிய நாடுகளின் எண்ணிக்கையே 7.

ஸ்பெயினில் 28,768 பேருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்களில் 1,772 பேர் இறந்துள்ளனர். 2,575 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

ஜெர்மனியில் 24,873 பேருக்கு தொற்று ஏற்பட்டு அவர்களில் 94 பேர் இறந்துள்ளனர். 266 பேர் மீண்டுள்ளனர்.

இத்தாலி, சீனா, ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா மரணங்களை எதிர்கொண்டுள்ள நாடாக இரான் இருக்கிறது.
அந்நாட்டில் 21,638 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 1,685 பேர் இறந்துள்ளனர். 7,931 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

பிரான்சில் 16,044 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 674 பேர் இறந்துள்ளனர். 2,200 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

தென் கொரியா பெருமளவில் நோயின் தாக்கத்தை மட்டுப்படுத்தியுள்ளது. சீனாவுக்கு வெளியே முதல் முதலாக அதிக நோய்த் தொற்றை எதிர்கொண்ட இந்த நாட்டில் இதுவரை 8,897 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் 104 பேர் இறந்துள்ளனர். 2,909 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

ஸ்விட்சர்லாந்தில் 7,245 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 98 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் 5,741 பேர் நோய்த் தொற்றுக்கு இலக்காகி 282 பேர் இறந்துள்ளனர்.

BBC.TAMIL