இராகவன் கருப்பையா | ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்தாராம் நீரோ மன்னன் – இந்தக் கதையாகத்தான் உள்ளது நம் நாட்டின் நிலைமை இப்போது.
கோவிட்-19 எனும் கொடிய அரக்கனைச் சமாளிப்பதற்கு நாடே போராடிக் கொண்டிருக்கும் சூழலில், திரை மறைவில் அரசியல் சித்து விளையாட்டு இன்னும் ஓயவில்லை என்றுதான் தெரிகிறது.
சுமார் 1 மாதத்திற்கு முன் ஆட்சியைப் பிடிப்பதற்கு முண்டியடித்து முன்னேறிய அரசியல்வாதிகள், தங்களுடைய நிலைகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கு அங்குமிங்குமாக தொடர்ந்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுதான் வருகின்றனர்.
மலேசியாவில் இதுவரையில் 1,500-க்கும் மேற்பட்டோரைத் தொற்றியுள்ள கோவிட்-19 கொடிய நோயினால், 2 வாரக் கால நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நாடே உறைந்து நிற்கின்றது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பிரதமர் முஹிடின் தனது பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் மர்சுக்கி யஹ்யாவை அதிரடியாக பதவிநீக்கம் செய்த நடவடிக்கை நாட்டு மக்களின் கவனத்தைச் திசை திருப்பியது.
இந்நோய் பரவியுள்ள மொத்தம் 168 நாடுகளில் மலேசியாவுக்கு 18-வது இடம் என்ற தகவல் நமக்கு கவலையையும் அச்சத்தையும் உண்டாக்குகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு எல்லா நாடுகளுமே முழு கவனத்தையும் ஒருமைப்படுத்தி கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மலேசியா மட்டும் சற்று மாறுபட்டிருப்பது வேதனையான விசயம்தான்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து, பெர்சத்து கட்சி மகாதீர் அணி, முஹிடின் அணி என இரு அணிகளாக பிரிந்து சின்னாபின்னமாகக் கிடப்பது நாம் அறிந்த ஒன்றே.
விரைவில் நடைபெறவிருக்கும் அக்கட்சி தேர்தலில் தனது அணியின் நிலையைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில், மர்சுக்கியை முஹிடின் பதவி நீக்கம் செய்தார் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால், மர்சுக்கி மகாதிரின் ஆதரவாளர்.
கட்சியின் அவைத்தலைவர் என்ற முறையில், தம்முடன் முஹிடின் இது குறித்து கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட மகாதிர், தமது ஒப்புதல் இல்லாமல் மர்சுக்கியைத் தன்னிச்சையாக அவர் நீக்கியது செல்லாது, அதுமட்டுமின்றி அது சட்டவிரோதமானதும் கூட என்று கடிந்துகொண்டார்.
எனினும், முஹிடினின் வாதமோ வேறு. கட்சித் தேர்தல் நடைபெறும் வரையில் தாமே இடைக்கால அவைத் தலைவர் பொறுப்பையும் வகிப்பதாக அவர் பிரகடனப்படுத்திக்கொண்டார்.
கடந்த 2015-ம் ஆண்டில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முஹிடினின் அரசியல் வாழ்க்கை ஏறக்குறைய அஸ்தமனம் ஆகிவிட்டது. அந்நிலையில் அவரை அரவணைத்து, பெர்சத்து கட்சியை அமைத்து, அவருக்கு மீண்டும் அரசியல் உயிரூட்டியது மகாதிர்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால், அதே முஹிடின் தற்போது மகாதிரைப் புறம்தள்ளி மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்தது மகாதிரின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரியதொரு பின்னடைவு என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.
ஆக, அக்கட்சியின் நிலைமை இழுபறியாக இருக்கும் இத்தகையச் சூழலில், நாட்டை மிரட்டிக்கொண்டிருக்கும் பூதாகரப் பிரச்னை மீது அவர்களால் முழுகவனம் செலுத்த முடியாமல் இருப்பது மிகவும் வேதனையான விசயம். ஏனென்றால், இவர்களுடைய அரசியல் விளையாட்டினால் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.
மகாதிரின் மற்றொரு தீவிர ஆதரவாளரான முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக்கின் மூவார் தொகுதிக்கும் மகாதிரின் லங்காவி தொகுதிக்குமான பிரதமர் இலாகாவின் நாடாளுமன்ற ஒதுக்கீடும் கூட மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவும் கூட சிறுபிள்ளைத்தனம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், இத்தகைய சித்து விளையாட்டினால் நேரடியாக பாதிக்கப்படுவது தொகுதி மக்கள்தான் – பழிவாங்கப்படும் அரசியல்வாதிகள் இல்லை.
இதற்கிடையே நம் நாட்டில் கோவிட்-19 விஷக்கிருமி தாக்கம் எல்லை மீறிப் போனதற்கு அரசாங்கமே காரணம் என்று குற்றஞ்சாட்டிய பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம், செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு பக்காத்தான் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கவர்ந்திழுப்பதிலேயே அவர்கள் இன்னமும் முனைப்பு காட்டுகின்றனர் என்று சினமடைந்துள்ளார்.
எது எப்படியாயினும் நாட்டு மக்கள் இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்துகொண்டுதான் இருக்கின்றனர் என்பதை எல்லாதரப்பினரும் உணர வேண்டும்.