அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பரிசோதனை மறுப்பா?

வாஷிங்டன்: அமெரிக்காவில், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை, 545 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க் மாகாணங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதால், இங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில், வெளிநாடுகளைச் சேர்ந்த, ஒரு கோடிக்கும் அதிகமானோர், முறையான ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு, கொரோனா அறிகுறி இருந்தாலும், முறையான ஆவணங்கள் இல்லாததால், மருத்துவமனைகளில் பரிசோதனை நடத்த, டாக்டர்கள் மறுப்பதாக தகவல் வெளியானது; இதை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் கூறியதாவது: சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் என்பதற்காக, கொரோனா அறிகுறி இருப்பவர்களை, அவர்களது சொந்த நாடுகளுக்கு அப்படியே திருப்பி அனுப்ப மாட்டோம். சட்டவிரோதமாக வசிப்பவர்கள், குடியேற்றத் துறை அதிகாரிகளை அணுகி, தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதை கூறினால், அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

dinamalar