கொரோனா வைரசால் நிலைமை மோசமாகும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் நாட்டு மக்களுக்கு கடிதம் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார்.
லண்டன், யு.கே. என்று அழைக்கப்படுகிற இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் கொரோானா வைரஸ் தனது ஆதிக்கத்தை பரப்பி வருகிறது.
இளவரசர் சார்லஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பால்மோரல் எஸ்டேட் மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது மனைவியும், இளவரசியுமான கமிலா, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையிலும், அங்கு தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.
இளவரசர் சார்லசை தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கடந்த 27-ந் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லண்டனில் எண்.10, டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அங்கிருந்தவாறு அவர் அரசு பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார்.
நேற்று அங்கு கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,019 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் அவர் கொரோனா வைரசால் நிலைமை மோசமாகப் போவதை எச்சரித்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர் எழுதப்போகிற இந்தக் கடிதம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 3 கோடி மக்களின் வீடுகளுக்கும் கொண்டு போய் நேரடியாக சேர்க்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கடிதத்தை அச்சிட்டு நாட்டு மக்களின் வீடுகளில் கொண்டு போய் வினியோகிக்க மட்டுமே 5.8 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.54 கோடியே 52 லட்சம்) செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
அந்தக் கடிதத்தில் அவர் எழுத இருப்பதாக தெரிய வந்திருப்பதாவது:-
ஆரம்பத்தில் இருந்தே நாம் சரியான நடவடிக்கைகளை, சரியான நேரத்தில் எடுக்க முற்பட்டோம்.
நாம் இதை, இப்படி செய்ய வேண்டும் என்று விஞ்ஞானம், மருத்துவ ஆலோசனைகள் கூறினால், அதை செய்வதற்கு நாம் தயங்கப்போவது இல்லை. நாம் அவற்றை செய்தே ஆக வேண்டும்.
நான் உங்களுக்கு சமமாக இருப்பது முக்கியம். நிலைமை சிறப்பு அடைவதற்கு முன்பாக மோசமாக ஆவப்போவதாக நாம் அறிவோம்.
ஆனால் அவற்றை சந்திக்க சரியான தயார் நிலையை ஏற்படுத்தி வருகிறோம். நாம் அனைவரும் சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என்பது முக்கியம். குறைவான உயிரிழப்பு இருக்கும். அதன் பின்னர் நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
இந்த வைரசை தோற்கடிப்பதற்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள், குறிப்பாக நமது தேசிய சுகாதார பணிகள் துறையில் பணியாற்றிக் கொண்டிப்பவர்கள், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து சுகாதாரத்துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
நமது டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பிற பணியாளர்கள் பிரமாதமாக பணியாற்றி வருவதைப் பார்க்கிறபோது உத்வேகம் வருகிறது. ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள், நர்சுகள் தேசிய சுகாதாரப்பணிகளுக்கு திரும்பி வருகின்றனர். மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருப்பவர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் தாமே முன்வந்து உதவிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் தேசிய அவசர காலமான இந்த தருணத்தில், நீங்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேசிய சுகாதார பணிகளையும், உயிர்களையும் காப்பாற்றுங்கள். இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும்.
கடிதத்துடன் மக்கள் அன்றாட வாழ்விலும், வீட்டிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கொரோனா வைரஸ் அறிகுறிகள், தனிமைப்படுத்த வேண்டியதின் முக்கியத்துவம், அவசர உதவிக்கு நாட வேண்டிய இணையதள முகவரி உள்ளிட்டவை பற்றிய துண்டு பிரசுரமும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிய வந்துள்ளது.
dailythanthi