கொரோனா வைரஸ்: உறவுகள் யாருமற்ற இறுதிச்சடங்கு – இத்தாலியில் இரட்டிப்பாகும் துயரம்

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது. பல குடும்பங்களிலும் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கான வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்டுள்ளன.

“பாதிக்கப்பட்டவர்களை இந்த நோய்த் தொற்று இரண்டு முறை கொல்கிறது” என்று மிலனில் இறுதிச்சடங்கு வளாகத்தில் பணியாற்றும் ஆண்ட்ரியா செராட்டோ கூறுகிறார்.

“மரணிப்பதற்கு முன்பே பாசத்துக்கு உரியவர்களிடம் இருந்து நோயாளி தனிமைப்படுத்தப் படுகிறார். பிறகு, யாரும் நெருங்கி வர அது அனுமதிப்பதில்லை.” என்றார்.

“குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர். இதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.”

`எங்களை நம்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை’

இத்தாலியில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படும் பகுதியில் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் யாரும் இல்லாமலேயே இறந்து போகிறார்கள். இது தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால், பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மரணத்துக்குப் பிறகு வைரஸ் பரவாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினாலும், அவர்கள் மீதுள்ள துணிகளின் மீது சில மணி நேரங்களுக்கு வைரஸ் செயல்தன்மையுடன் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் உடனடியாக உடல்களை சீல் செய்து அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.

“எனவே, கடைசியாக ஒரு முறை உடலை நாங்கள் பார்க்கலாமா என குடும்பத்தினர் கேட்கிறார்கள். ஆனால், அதற்கு அனுமதி இல்லை” என்று கிரெமோனா நகரில் உள்ள பராமரிப்பு அலுவலர் மேஸ்ஸிமோ மன்காஸ்ட்ரோப்பா கூறுகிறார்.

இறந்தவர்களை, அவர்களுக்குப் பிடித்த, நல்ல உடைகளுடன் அடக்கம் செய்ய முடியாது. மாறாக மருத்துவமனையில் தந்த கவுன் உடையில் யார் என்று தெரியாத வகையிலேயே எல்லாம் நடக்கின்றன.

ஆனால் மேஸ்ஸிமோ தன்னால் இயன்றதைச் செய்கிறார்.

“குடும்பத்தினர் தரக் கூடிய உடைகளை, அவர் அணிந்திருப்பதைப் போல, உடலின் மீது நாங்கள் அணிவிக்கிறோம்.. மேலே சட்டையும் கீழே ஸ்கர்ட்டும் அணிவிக்கிறோம் ” என்று அவர் கூறுகிறார்.

“உறவினர்கள் விருப்பப்படி அவர்களை நல்ல தோற்றம் கொண்டவராக எங்களால் ஆக்க முடியாது. அது மிகவும் வருத்தமானது.” என கவலையுடன் அவர் தெரிவித்தார்.

முன் எப்போதும் இல்லாத இந்தச் சூழ்நிலையில், கல்லறை பராமரிப்பாளர்களே குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, மத குருமார்களுக்கு மாற்றாக எல்லா பணிகளையும் செய்பவர்களாக மாறியுள்ளனர்

இறுதிச் சடங்கு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி மரணிப்பவர்களுக்கு நெருக்கமானவர்கள், இயல்பாகவே தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

“அவர்கள் சார்பில் எல்லா பொறுப்புகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்கிறார் ஆண்ட்ரியா. “மரணித்தவருக்கு பயன்படுத்தப்படும் சவப்பெட்டியின் புகைப்படத்தை அவர்களுக்கு நாங்கள் அனுப்புகிறோம். பிறகு மருத்துவமனையில் இருந்து உடலை எடுத்து அடக்கம் செய்கிறோம் அல்லது எரியூட்டுகிறோம். எங்களை நம்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.”

உயிரிழந்தவர்களுக்கு உற்றவர்களின் துன்பத்தை குறைக்க முடியவில்லையே என்பது ஆண்ட்ரியாவுக்கு மிகவும் கஷ்டமான விஷயமாக உள்ளது. தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை குடும்பத்தினருக்கு அவர் சொல்கிறார். தான் செய்யக் கூடாத விஷயங்களின் பட்டியலை அவர் கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

“நாங்கள் உடை அணிவிக்க முடியாது, தலைமுடியை அலங்கரிக்க முடியாது, மேக்கப் போட்டுவிட முடியாது. நல்ல தோற்றம் கொண்டவராக அமைதியானவராக ஆக்க முடியாது. அது மிகவும் கவலைக்குரியது.”

கடந்த 30 ஆண்டுகளாக ஆண்ட்ரியா பராமரிப்பாளராக இருந்து வருகிறார். அவருக்கு முன் அவருடைய தந்தை அந்தப் பணியைச் செய்து வந்தார். துயரத்தில் இருப்பவர்களுக்கு சிறிய விஷயங்கள் எல்லாம் முக்கியமானவையாக இருக்கும் என்கிறார் அவர்.

“கடைசி முறையாக கன்னத்தை தொட்டுப் பார்த்துக் கொள்வது, இறந்தவரின் கையைப் பிடிப்பது, பார்வைக்கு கண்ணியமாகத் தோற்றமளிப்பது எல்லாம் முக்கியம். அதைச் செய்ய முடியாமல் போனது இறந்தவர்களின் உறவினர்களின் மன வலியை அதிகரிப்பதாக உள்ளது.”

கொரோனா வைரஸ் பாதித்துள்ள இந்த காலக்கட்டத்தில், மூடப்பட்ட அறைகளின் இரு புறத்திலும் மூடியுள்ள கதவின் வழியாகத்தான் சந்திக்க முடியும் நிலை உள்ளது.

உறவினர்கள் கையெழுத்துக் குறிப்புகள், குடும்ப உடைமைகள், ஓவியங்கள் மற்றும் கவிதைகளைக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். தங்களுடைய தாய் அல்லது தந்தை, சகோதரன் அல்லது சகோதரி, மகன் அல்லது மகளுடன் அதையும் அடக்கம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அப்படி தருகிறார்கள்.

ஆனால் இவற்றில் ஒன்றுகூட சவப்பெட்டியில் வைக்கப்படாது.

இத்தாலியில் இறுதிச் சடங்கு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வீட்டில் யாராவது இறந்தால், உள்ளே பராமரிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால் முழுமையான பாதுகாப்பு உடைகளுடன் வர வேண்டும். கண்களைப் பாதுகாக்கும் கண்ணாடிகள், மாஸ்க்குகள், கையுறைகள், கோட்கள் அணிந்து வர வேண்டும். பாசத்துக்குரிய ஒருவர் மரணிப்பதைப் பார்ப்பது ஆழ்ந்த துயரமான விஷயம்.

ஆனால் பராமரிப்பாளர்கள் பலரும் இப்போது தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையில் உள்ளனர். சிலர் தங்கள் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களைக் கையாளும் நிலையில் உள்ளவர்களுக்குப் போதிய மாஸ்க்குகள் அல்லது கையுறைகள் இல்லை என்பது பெரிய கவலைக்குரிய விஷயம்.

“இன்னும் ஒரு வார காலத்துக்கு சமாளிக்கும் அளவிற்கு எங்களிடம் பாதுகாப்பு கவச உடைகள் உள்ளன” என்று ஆண்ட்ரியா தெரிவித்தார்.

“ஆனால், அவை தீர்ந்துவிட்டால், நாங்கள் பணிகளை நிறுத்திவிடுவோம். நாட்டில் அதிக அளவில் இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனம் நாங்கள் தான். மற்றவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.”

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் நோக்கில், இத்தாலியில் இறுதிச் சடங்கு சேவைகளுக்கு தடை விதிக்கும் தேசிய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க மரபுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் நாட்டில் இது முன் எப்போதும் நடந்திராத விஷயமாக உள்ளது.

அவசர கால நடவடிக்கையாக, இத்தாலியில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் ஒரு முறையாவது ஒரு உடலை ஆண்ட்ரியா அடக்கம் செய்கிறார். இறந்தவருக்கு வேண்டிய பலரும் தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பதால், இறுதி விடை கொடுப்பதற்கு யாருமே வருவதில்லை.

“உடல் அடக்கம் செய்யப்படும் போது ஒன்றிரண்டு பேருக்கு அனுமதி உண்டு. அவ்வளவு தான்” என்று மேஸ்ஸிமோ கூறினார். “யாராலும் சில வார்த்தைகள் கூட பேச முடிவதில்லை. எனவே அது மௌனமாகவே முடிந்துவிடுகிறது” என்றார் அவர்.

தன்னால் முடிந்த வரையில், அதைத் தவிர்க்க அவர் முயற்சி செய்கிறார். சவப்பெட்டியை காரில் வைத்து, தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று, பெட்டியைத் திறந்து, அங்கேயே ஆசிர்வதிக்குமாறு மதகுருவை அவர் கேட்டுக்கொள்கிறார்.

பெரும்பாலும் சில நொடி நேரத்தில் இவை முடிந்துவிடுகின்றன. அடுத்து இன்னொருவர் காத்திருப்பார்.

சவப்பெட்டிகளாக நிறைந்திருக்கும் நாடு

இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் மார்ச் 24 வரை சுமார் 7,000 பேர் பலியாகியுள்ளனர் – உலகில் வேறு எந்த நாட்டையும்விட இது அதிகம்.

“கிரெமோனாவில், இறுதிச்சடங்கு வளாகத்துக்கு வெளியே நீண்ட வரிசை காத்திருக்கிறது. அது ஏதோ சூப்பர் மார்க்கெட் போல உள்ளது” என்று ஆண்ட்ரியா கூறினார்.

வடக்கு இத்தாலியில் மருத்துவமனைகளில், இறந்தவர்களின் உடல்களை வைக்கும் அறைகள் நிரம்பிவிட்டன.

`கிரெமோனாவில் மருத்துவமனையில் உள்ள சிற்றாலயம், பழைய பொருட்களை வைக்கும் ஒரு கிடங்கு போல மாறிவிட்டது” என்று மேஸ்ஸிமோ கூறுகிறார்.

மருத்துவமனைகளில் சவப்பெட்டிகள் குவிந்து கிடக்கின்றன. பெர்காமோவில் தான் இத்தாலியில் அதிகபட்ச மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நகரில் உள்ள கல்லறைகள் இப்போது நிரம்பிவிட்டதால், ராணுவத்தினர் சேவைக்கு வந்துள்ளனர்.

கடந்த வாரம் ஒரு இரவில், சாலையில் 70 சவப்பெட்டிகளை ராணுவ வாகனங்கள் அமைதியாக சுமந்து சென்றதை, உள்ளூர் மக்கள் மௌனமாக பார்த்துள்ளனர்.

ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு நண்பர் அல்லது அருகில் வசிப்பவரின் உடல்கள் இருந்திருக்கும். இறுதிச் சடங்கு செய்ய பக்கத்து நகருக்கு அவர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள். நோய்த் தொற்று தொடங்கியதில் இருந்து, சில காட்சிகள் பெரும் அதிர்ச்சையை அல்லது மிகுந்த வருத்தத்தைத் தருபவையாக அமைந்துள்ளன.

நாடு முழுக்க சேவையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் கதாநாயகர்களாக, இத்தாலியின் நெருக்கடியான காலத்தில் மீட்பர்களைப் போல பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இறுதிச் சடங்குகளை நடத்துபவர்களுக்கு, அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

“ஆன்மாக்களை எடுத்துச் செல்லும் சாதாரணமானவர்களாகத் தான் பலரும் எங்களைப் பார்க்கிறார்கள்” என்று மேஸ்ஸிமோ குறிப்பிட்டார்.

இறந்தவர்களின் ஆன்மாக்களை, இந்த உலகில் இருந்து இறந்தவர்களின் உலகைப் பிரிக்கும் ஆற்றின் வழியாக எடுத்துச் செல்பவர் என்று நம்பப்படும் சாரோன் என்பது போல தங்கள் பணியை பல இத்தாலியர்களும் பார்ப்பதாக அவர் கூறினார்.

பலருடைய பார்வையில், நன்றியில்லாத மற்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிராத பணியாக இருக்கிறது.

“ஆனால் இறந்த அனைவருக்கும் கண்ணியத்தைத் தர வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என்று நான் உறுதியளிக்க முடியும்.”

“எல்லாமும் சரியாகிவிடும்” – என்பது இத்தாலியில் கொரோனா நெருக்கடி உருவானதில் இருந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹேஷ்டேக் ஆக உள்ளது. அதில் வானவில் எமோஜியும் சேர்ந்துள்ளது.

ஆனால் இப்போதைக்கு சூரிய ஒளிக்கான அறிகுறி தென்படவில்லை. எல்லோரும் அதற்காகப் பிரார்த்தனை செய்தாலும், எல்லாமே எப்போது சரியாகும் என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

bbc