இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.
கடந்த காலத்தில் நிகழ்ந்திராத ஒரு பெரு மந்தநிலை இதனால் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் ஏற்படக்கூடிய சமூக பொருளாதார தாக்கம் குறித்து ஐ.நாவின் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8,50,000ஆக உயர்ந்துள்ளது. இதனால் 41,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸால், அமெரிக்காவில் 3,600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட அதிகமாகும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி, அமெரிக்காவில் 1,81,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அங்கு நான்கில் ஒரு அமெரிக்கர் ஏதேனும் ஒரு வகையில் இந்தத் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ளார் அல்லது முடக்கப்படுவார்.
இதே நேரத்தில் வைரஸ் தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 849 மரணங்கள் பதிவாகி உள்ளன.
பிரிட்டனில் மார்ச் 30ம் தேதி அன்று மட்டும் 381 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,789ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 13 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளதாக லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனை அறக்கட்டளை கூறுகிறது.
குட்டாரஸ் பேசியது என்ன?
நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் பேசிய குட்டாரஸ், “சமூகத்தை மோசமாக தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்று, மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் காவு வாங்கி வருகிறது” என்றார்.
“ஐ.நா தொடங்கப்பட்டதில் இருந்து, நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கோவிட் – 19 தொற்று உள்ளது”
இத்தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்த சுகாதார நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இந்த நோய்த் தொற்று பரவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
வளர்ந்த நாடுகள், மற்ற நாடுகளுக்கு உதவுமாறு வலியுறுத்திய குட்டரஸ், அப்படி இல்லையென்றால், இந்த வைரஸ் தொற்று காட்டுத்தீ போலப் பரவும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
உலகளவில் இந்த வைரஸ் தொற்றால் சுமார் 25 மில்லியன் பேர் வேலையிழப்பார்கள் என ஐ.நா அறிக்கை கூறுகிறது.
உலகளாவிய அந்நிய நேரடி முதலீடுகள், 40 சதவீதம் வரை கீழ்நோக்கி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
BBC