அடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் ”கொரோனா வைரசை கட்டுப்படுத்த, அடுத்த, 30 நாட்கள் மிக முக்கியமானவை. இந்த நாட்களில், நமக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது,” என, அமெரிக்க மக்களுக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் கடும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை, 1.64 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 3,100 பேர் பலியாகியுள்ளனர். வைரசை கட்டுப்படுத்த, ஏப்., 30 வரை நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் சமூக விலகலும், ஊரடங்கு நடவடிக்கையும் நீட்டிக்கப்பட்டுள்ளன. நெருக்கடி இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று கூறியதாவது: அமெரிக்கா முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த, 30 நாட்கள், நமக்கு மிகப் பெரிய சவாலும், நெருக்கடியும் காத்திருக்கிறது.இந்த, 30 நாட்களும், நமக்கு மிக முக்கியமானவை. ஏனென்றால், கொரோனா பாதிப்பிலிருந்து நாம் மீண்டுவர வேண்டியுள்ளது. ஆனால், அதற்காக நாம் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது.

எவ்வளவுக்கு எவ்வளவு விட்டுக் கொடுக்கிறோமோ, தியாகம் செய்கிறோமோ, அவ்வளவு விரைவில், இந்த பாதிப்பிலிருந்து நம்மால் மீள முடியும். அந்த நாளுக்குக்காக தான் நாம் காத்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிதாக, 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டிய சவாலான பணி, நம் முன் உள்ளது. தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கும் பணியில், ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள், தங்கள் வழக்கமான கார் தயாரிப்பு பணியை நிறுத்தி விட்டு, வென்டிலேட்டர்களை தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். விரைவில் அறிவிப்புஅதற்கு பின் தான், பொருளாதாரத்தை சரி செய்யும் பணி துவங்கும். வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டால், பொருளாதார பாதிப்பை விரைவில் சரி செய்ய முடியும். மக்கள், இன்னும் சில கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து, விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

BBC