ஐ.நா தொடங்கப்பட்டதில் இருந்து, நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கோவிட் – 19 தொற்று உள்ளது இத்தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்த சுகாதார நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இந்த நோய்த் தொற்று பரவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை
அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 1 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணித்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்க மக்கள் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தனித்து இருத்தல், வீட்டை விட்டு வெளியேறாமல் இருத்தல் உள்ளிட்ட அறிவுரைகளை பின்பற்றுவதை பொறுத்தே இந்த கணிப்பு நிஜமாகுமா அல்லது இந்த கணிப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்படுமா என்பது தெரிய வரும் என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்
அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பா – சமீபத்திய தகவல்கள்
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால் உண்டான மரணங்களின் எண்ணிக்கை 30,000 கடந்துள்ளது சமீபத்திய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
செவ்வாயன்று பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஒரே நாளில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் 499 பேரும், ஸ்பெயினில் 849 பேரும் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் உடல்நிலை மோசமாக உள்ளவர்களை பாரிஸிலிருந்து குறைவாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதேபோல் ஸ்பெயினிலும் திட்டமிட்டு வருகின்றனர். ஜெர்மனியில் மக்கள் வெளியே வர விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் எத்தனை காலம் நீடிக்கும் என்பது குறித்து சான்சலர் ஏங்கலா மெர்கல் அந்நாட்டின் மாநில தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளார்.
ஜெர்மனியில் இதுவரை 67,366 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 732 பேர் அந்த தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது.
அந்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,428ஆக உள்ளது. இந்த வருடம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் வரை வீழ்ச்சி இருக்கும் என்பதே நிதர்சனம் என அந்நாட்டின் தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்லோவேனியாவில், மருத்துவமனைகளின் இயக்குநர், அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஆகியோருக்கு உடல்நலம் குன்றினால் சிகிச்சை அளிக்க மாட்டேன் என்று கூறியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.