தலிபான்கள் வைத்த குண்டு வெடித்து தலிபான்களே பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் சாலையில் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில் தலிபான்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

காபுல்: ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டுச்சண்டையில் அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது.

அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், உள்நாட்டுப் படையினர் மீதான தாக்குதல் தொடரும் எனவும் தலிபான்கள் தெரிவித்தனர்.

இதனால், அரசுப்படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பாதுகாப்புப்படையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல், தற்கொலைப்படை தாக்குதல்கள், கண்ணிவெடி  தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடு என பல்வேறு சம்பவங்களை தலிபான் பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹோர் மாகாணத்தில் பாதுகாப்பு படையினரை தாக்கும் முயற்சியாக தலிபான் பயங்கரவாதிகள் ஹோர்-ஹீரெட் நெடுச்சாலையோரம் வெடிகுண்டுகளை பதித்து வைத்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெடிகளை பதிக்க வந்திருந்த 3 தலிபான்கள்  உயிரிழந்தனர்.

தலிபான்கள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளால் தலிபான்களே உயிரிழந்துள்ளதாக மாகாண போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

malaimalar