இராகவன் கருப்பையா- உலக வரலாற்றில் 2ஆம் உலகப் போருக்குப் பிறகு எந்த ஒரு நாடும் இப்படிப்பட்ட இக்கட்டானதொரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதில்லை.
கோவிட்-19 எனும் கொடிய நோயினால் உலகமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தென் கிழக்கு ஆசியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு மலேசியாதான்.
நம் நாட்டில் நேற்று வரையில் 3,483 நபர்களுக்கு இந்நோய் தொற்றியுள்ள நிலையில் நாளுக்கு நாள் அதைகரித்தும் வருகிறது. அதோடு 57 நபர்கள் உயிர் இழந்துள்ளனர்.
இந்நிலையில், பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் சற்றும் எதிர்பாராத வகையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே நாட்டின் சரித்திரத்தில் ஆகப் பெரிய அமைச்சரவையைக் கொண்டுள்ள மலேசியாவுக்கு இப்புதிய நியமனம் மக்களின் வரிப்பணத்தை மேலும் விரயமாக்கும் மற்றொரு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. விரக்தியடைந்த ஹாடி பழையபடி மீனவனாகப் போவதாக தமது உள்ளக் குமுறலை வெளிப்படுத்திய அதே சமயம் கட்சியின் இதரத் தலைவர்கள் முஹிடினுக்கு நெருக்குதல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
அதன் விளைவுதான் இந்த நியமனம் என்பதில் ஐயமில்லை. மேலும் ஹாடி தலைமையிலான 18 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லையென்றால் ‘பிரதமர்’ என்ற சிம்மாசனத்தில் முஹிடின் அமர்ந்திருக்க முடியாது.
இதன் முக்கியதுவத்தை தெரியப்படுத்தும் வகையில் ஹடி அவாங் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது அறிக்கையில் விவரித்துள்ளார். 22.3.2020 திகதியிட்டு அராபிக் மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையில் ஹடி தனது பாஸ் கட்சியின் முக்கியத்துவத்தையும், அதேவேளையில் தேசிய முன்னணி கட்சியின் பல்லின ஒருமைபாட்டின் வழிமுறைகளை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலேசிய பெரும்பான்மை இஸ்லாம் மதத்தை சார்ந்து இருப்பதால், இது ஒரு மதசார்புடைய கொள்கைகளையும் நடைமுறையையும் கொண்டிருக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறார்.
இவர்கள் எல்லாருமே நாட்டு மக்களின் நலன் கருதி குறைந்தபட்சம் தற்சமயத்திலாவது சுயநலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்தினால் மக்கள் அவர்களுக்கு அளித்துள்ள பதவிகளுக்கு மறியாதையாக இருக்கும் என்ற நம்பிக்கையை அவரின் அறிக்கை முற்றாக தகர்த்துள்ளது.
அது தேசிய முன்னணியின் பல்லின அரசியல் கோட்பாட்டிக்கு உலை வைப்பதாக அமைந்துள்ளது.