‘டிக் டோக்’ மோகத்தில் சீரழியும் நம் சமூகத்தின் இளையோர்

இராகவன் கருப்பையா – உலகளாவிய நிலையில் உள்ள எண்ணற்ற சமூக வலைத்தளங்களில் ‘டிக் டோக்’ எனும் செயலி வெகுசன மக்களிடையே பிரதான இடமொன்றை பிடித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நம் நாட்டைப் பொருத்த வரையில், இணையப் பயனீட்டாளர்களில் 85 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இந்த ‘டிக் டோக்’ செயலியை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் இதனை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களில் எத்தனைப் பேர் அதனை ஆக்ககரமாகவும் இலாபகரமாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் கேள்விக் குறி.

மற்ற இனத்தவரோடு ஒப்பிடுகையில் நம் சமூகத்தைச் சார்ந்த குறிப்பிட்ட ஒரு சாரார் வேலை வெட்டி இல்லாததைப் போல, சண்டை சச்சரவு, போட்டி பொறாமை, இழிச் சொற்களை பயன்படுத்தி வேண்டாதவர்களை வசைப்பாடுவது போன்ற கீழ்த்தரமான செயல்களுக்கு இந்த ‘டிக் டோக்’ செயலியை பயன்படுத்துவது வியப்பாகவும் வெறுக்கத்தக்க வகையிலும் உள்ளது.

இவர்களுடைய கோபங்களையும், குரோதங்களையும், ஒரு சில வேளைகளில் சோகங்களையும் ஏன் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதுதான் புரியாதப் புதிராக உள்ளது.

பெரும்பாலான மலாய்க்காரர்களும் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நேரடி விற்பனைத் துறையிலும் இதரத் தொழில்களுக்கும் இதனை மிகவும் ஆக்ககரமாகப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதாகத் தெரிகிறது.

சில இந்திய இளையோரும் உள்பட இவர்கள் எல்லாருமே நேர்மறையான குறிக்கோளோடு, மிகுந்த உத்வேகத்துடன் செயலாற்றி பணம் சம்பாதிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இதர சிலரோ தேவையில்லாமல் மற்றவர்களின் விவகாரங்களில் மூக்கை நுழைத்து எதிர்மறையானக் கருத்துகளை பதிவிட்டு குட்டையை குழப்புவதில் ஆனந்தம் காண்கின்றனர்.

இவர்களுடைய அடாவடித்தனத்தால் கடந்த காலங்களில் ஒரு சில பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை நாம் இன்னும் மறக்கவில்லை.

இருப்பினும் இன்னும் சில அறிவிலிகள் முழு நேரமாக இந்த ‘டிக் டோக்’ செயலிக்குள் புகுந்து மிகக் கேவலமாகத் தங்களுடைய அடி மட்ட எண்ணங்களை பதிவிட்டு அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் சமூகத்திற்கும் அவமானச் சின்னங்களாக விளங்குகின்றனர்.

“உன்ன நேர்ல பாத்தா செருப்பக் கழட்டி அடிப்பேண்டா,” என ஒரு இளம் பெண் யாரையோ திட்டுவதை ‘டிக் டோக்’கில் காண நேர்ந்தது.

பிரிதொரு பதிவில், “என் கூட ஒரு நாள் குடும்பம் நடத்த வரியா,” என இளைஞர் ஒருவர் யாரையோ மிகவும் கீழ்த்தரமான வகையில் விமர்சித்து அழைக்கிறார்.

மற்றொரு பதிவில், “டேய், நீ ஒரு கேடு கெட்ட மலைக் குரங்கு,” என இன்னொரு இளம் பெண் தனக்கு வேண்டாதவரை நோக்கி வசைப்பாடுகிறார்.

தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளும் இத்தகைய பதிவாளர்களை என்னவென்று சொல்வது? நல்ல சிந்தனையுடையவர்களாக இருந்தால் இதுபோன்ற தரங்கெட்டப் பதிவுகளை தவிர்க்கலாம் அல்லவா!

அதற்கு மாறாக, தன்முனைப்பு நிறைந்த தேர்மறையான விஷயங்களுக்கு இந்த ‘டிக் டோக்’ செயலியை அவர்கள் ஆக்ககரமான வகையில் பயன்படுத்தலாம் என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

தனது மகள் கல்வி பயிலும் ஒரு தமிழ் பள்ளியில் வகுப்பாசிரியை ஒருவர் பாட நேரத்தின் போதும், கார் நிறுத்துமிடத்திலும் நடனமாடி ‘டிக் டோக்’ பதிவு செய்ததாக அண்மையில் ஒரு குடும்ப மாது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அந்த ஆசிரியை செய்த காரியம் தவறென்று நாம் சொல்லிவிட முடியாது. ஆனால் ‘இடம், பொருள், ஏவல்’, என ஒன்று இருப்பதை அவர் மறந்துவிட்டார் என்பதுதான் வருத்தமான விஷயம்.

பொதுவாக, ஒரு டிக் டோக் பதிவில், எப்படிபட்ட பதிவு ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அநாகரிமான சொற்கள், மனதை நோகடிக்கும் வசனம், கேலி செய்தல் போன்றவை தவிர்க்கபட வேண்டும்.