கொரோனா வைரஸ்: 13 லட்சம் பேர் பாதிப்பு, ஜப்பானில் அவசர நிலை – அண்மைய செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,444 ஆக உள்ளது. அதே நேரம் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து இருந்து வருகிறது. அந்நாட்டில் சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும், இத்தாலியில் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஜான்சனுக்கு கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவனைக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டார் என அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் தினந்தோறும் புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவனை சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் முதல்முறையாக குறைந்துள்ளதாக அம்மாகாண மேயர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர நேற்று முன் தினத்தைவிட, நேற்றைய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது வரை நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 4.159 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள உயிரியல் பூங்காவில் இருக்கும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவின் பராமரிப்பாளர் ஒருவரிடம் இருந்து, புலிக்கு கொரோனா பரவியுள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பெண் புலிக்கு மட்டுமல்லாமல், அதே பூங்காவில் இருக்கும் சில ஆப்ரிக்க சிங்கங்களும் வறட்டு இருமலால் அவதிப்படுவதாகவும், கூடிய விரைவில் அனைத்து விலங்குகளும் குணமடைவார்கள் எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவுவது அரிதாகவே நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது வரை 5,700-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மூன்று லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆஸ்திரேலிய அரசு, மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உலகிலேயே மிக அதிகம் என தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவ முக்கிய காரணமாக கூறப்படும் ரூபி பிரின்சஸ் சொகுசுக்கப்பல், பல நாள் காத்திருப்பிற்கு பின் சிட்னி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பயணித்தவர்களில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் விரைவில் அவரச நிலை?

ஜப்பானில் விரைவில் அவரச நிலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானிய ஊடகங்கள் அளித்த தகவலின்படி, வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையிலும் உறுதிப்படுத்தப்படாத எண்ணிக்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று அவசர நிலை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இன்றே எந்த அறிவிப்பும் அமல்படுத்தப்படாது என்றும் கருதப்படுகிறது.

டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற பெரிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜப்பான் நாடு முழுவதும் பரவலாக ஒரே விதமான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைப் போல ஜப்பான் பிரதமரால் நாட்டை முடக்கும் நடவடிக்கையை அமல்படுத்த முடியாது. இதுவரை ஜப்பானில் 3600 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், 85 பேர் உயிரிழந்துள்ளனர். டோக்கியோவில் மட்டுமே 1000திற்கு அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

BBC.TAMIL