துணைப் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டிஏபி விரும்புகிறது

டிஏபி மலேசியாவை “குடியரசாக” மாற்ற விரும்புகிறது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறிக்  கொண்டிருப்பது “அப்பட்டமான பொய்” என்று கூறிய டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அதற்காக முஹைடின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஷா அலாமில் நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான் ராக்யாட் பேரணியில் அவர் பேசினார். மலேசியாவை குடியரசாக்க வேண்டும் என டிஏபி அறிக்கை வெளியிட்டதில்லை என இந்த வாரத் தொடக்கத்தில் தாம் வலியுறுத்தியதை அவர் அந்தப் பேரணியில் மீண்டும் கூறினார்.

“அது அப்பட்டமான பொய். அத்தகைய அறிக்கையை எந்த டிஏபி தலைவரும் வெளியிட்டதில்லை. பிரதமர் யாங் டி பெர்துவான் அகோங்கினால் தேர்வு செய்யப்படாமல் தேர்தல்கள் அடிப்படையில் மட்டும் பிரதமருடைய பதவி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என எந்த டிஏபி தலைவர் எங்கு எப்போது அறிக்கை வெளியிட்டார் என்பதற்கு ஆதாரத்தைக் காட்டுமாறு நான் முஹைடினுக்குச் சவால் விடுக்கிறேன்,” என லிம் சொன்னார்.

அந்த அம்னோ துணைத் தலைவர் கோலாலம்பூரில் கடந்த வாரம் அம்னோ பொதுப் பேரவை தொடங்கிய போது தாம் வெளியிட்ட “பொறுப்பற்ற அலட்சியமான” கூற்றுக்கு ஆதாரத்தைக் காட்ட வேண்டும் அல்லது மன்னிப்புக் கேட்க வேண்டும் என லிம் கேட்டுக் கொண்டார்.

“குடியரசு ஒன்றை அமைக்க டிஏபி விரும்புகிறது என அதற்கு எதிராக அம்னோ பொதுப் பேரவையில் வெளியிட்ட பொறுப்பற்ற அலட்சியமான குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை முஹைடின் காட்டாவிட்டால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். தமது கருத்தை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் முதல் தரத்தைச் சேர்ந்த பொய்யர் என அம்பலப்படுத்தப்படுவார்.”

நாட்டை ஆளும் அம்னோ கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகளைச் சாடுவது முதலிடம் வகித்தது. “பிரதமர் யாங் டி பெர்துவான் அகோங்கினால் தேர்வு செய்யப்படாமல் தேர்தல்கள் அடிப்படையில் மட்டும் பிரதமருடைய பதவி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்,” என டிஏபி துணிச்சலாகக் கூறுகிறது. அதன் பொருள் என்ன?” என்று கடந்த செவ்வாய்க்கிழமை அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி ஆண்டுப் பொதுக் கூட்டங்களை கூட்டாகத் தொடக்கி வைத்த போது முஹைடின் வினவினார்.

அத்துடன் அவர் அந்த எதிர்க்கட்சியை “இனவாதி” என்றும் “தீவிரமான பேரினவாதக் கட்சி” என்றும் “மலாய்க்காரர்களைக் கீழறுப்புச் செய்ய” விரும்புகிறது என்றும் சாடினார்.

TAGS: