கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் – தென்கொரியாவில் ஆளும் கட்சி அமோக வெற்றி

தென்கொரியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அந்த நாட்டின் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றது.

சியோல், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பல முக்கிய நிகழ்வுகளை ஒத்திவைத்துள்ள நிலையில், அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் தென்கொரியா நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தியது.

இதன் மூலம் ஒரு பெருந்தொற்று அபாயத்துக்கு மத்தியில் முரண்பாடுகளை களைந்து, தேர்தல் எனும் ஜனநாயக திருவிழாவை எப்படி நடந்த வேண்டும் என்பதற்கு தென்கொரியா முன்மாதிரியாக அமைந்துள்ளது.

300 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 66.2 சதவீத வாக்குகள் பதிவானதாக தென்கொரியா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்களிப்பதை தங்களின் உரிமையாக கருதிய தென்கொரியா மக்கள், கொரோனா அச்சத்தை புறம் தள்ளிவிட்டு தேர்தலில் பங்கேற்றதால் இத்தகைய வியக்கத்தக்க வாக்குப்பதிவு சாத்தியமானதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில், தென்கொரியா தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருந்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மக்களின் பயத்தை போக்கி, அவர்களை வாக்களிப்பதற்கு தூண்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

300 இடங்களுக்கு 35 கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கும் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய எதிர்கால கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. நேற்று காலை அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவித்தது.

இதில் அதிபர் மூன் ஜே இன்னின் ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 300 இடங்களில் 180 இடங்களை ஜனநாயக கட்சி கைப்பற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த பெரும்பான்மை வெற்றியானது, அணு ஆயுத போட்டியாளரான வடகொரியாவுடன் தூதரக உறவை புதுப்பிப்பது போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயல்பாடுகளை தொடர அதிபர் மூன் ஜே இன் அரசுக்கு தைரியம் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

இதுகுறித்து ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் லீ ஹே சான் கூறுகையில், “இந்த தேர்தல் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை விட அதிக பொறுப்பையே தந்துள்ளது. கொரோனா வைரசின் நெருக்கடியையும், அது மக்களின் வாழ்வாதாரத்துக்கும், தேசிய பொருளாதாரத்துக்கும் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலையும் சமாளிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என கூறினார்.

இதனிடையே வடகொரியாவால் கைவிடப்பட்டு தென்கொரியாவில் தஞ்சம் அடைந்த ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக தென்கொரியா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தென்கொரியா நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் வடகொரியா பிரஜை இவர்தான். இங்கிலாந்துக்கான வடகொரியாவின் முன்னாள் தூதரக அதிகாரியான தாயீ யாங் ஹோ, தலைநகர் சியோலில் உள்ள கங்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

dailythanthi