‘எதிர்க்கட்சி தொகுதிகளுக்கு உணவு கூடைகள் எங்கே?’

எதிர்க்கட்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட உணவு கூடைகளை விநியோகிப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருனை கேட்டுக் கொண்டுள்ளார் செகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோஹ்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களிலும், சமூக நலத்துறையின் மூலம் பாராளுமன்றத் தொகுதி மக்களுக்கு அரசாங்கம் உறுதியளித்த 1,000 கூடைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை”.

“குறைந்தது 54 எதிர்க்கட்சி நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை இன்னும் அத்தகைய உதவிகளைப் பெறவில்லை” என்று யோஹ் கூறினார்.

அப்பகுதிகளையும் பட்டியலிட்டார் யோஹ். அந்த பட்டியலின்படி, செகாம்புட் அதன் வாக்குறுதியளிக்கப்பட்ட 1,000 கூடைகளில் 250-ஐ பெற்றுள்ளது.

உணவு கூடை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டால், அது பி40 குழுவை பாதிக்கும் என்பதை ரினாவுக்கு நினைவுபடுத்தினார் யோஹ்.

முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமது பிரதிநிதித்துவப்படுத்தும் லங்காவியில் மட்டுமே மொத்த 1,000 உணவு கூடை ஒதுக்கீட்டை பெறும் ஒரே எதிர்க்கட்சி பகுதி என்றும் பட்டியல் காட்டுகிறது.