தலிபான் கல்வி அதிகாரிகளுடன் மலேசியா கலந்துரையாடல் தேவையா?

இராகவன் கருப்பையா – நம் நாட்டின் கல்வித் தரம் அண்மைய ஆண்டுகளாகக் கண்டுள்ள சரிவு நமக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

தென் கிழக்காசியாவைப் பொருத்த வரையில் சிங்கப்பூர் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் கூட தற்போது மலேசியாவை முந்திக் கொண்டு தங்களுடைய கல்வித் தரத்தை உயர்த்திக் கொண்டுள்ளன .

பொதுவான நிர்வாகக் கோளாறு ஒரு புறமிருக்க, பாடத் திட்டங்களில் அளவுக்கு அதிகமாக சமயம் தொடர்பான விஷயங்கள் உள்ளே திணிக்கப்பட்டுள்ளது, நம் கல்வித் தரத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

முன்னாள் பிரதமர் மகாதீர் கூட இது குறித்து பல தடவை கருத்துரைத்துள்ளார். அதாவது, நம் பள்ளிகள் தற்போது சமயப் பள்ளிகளைப் போல உருமாற்றம் கண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிற நாடுகளுக்குக் குடியேறும் மலேசியர்கள், இந்நாட்டின் அரசியல் கோளாறுகளைச் சுட்டிக் காட்டுவதோடு, தங்களுடைய பிள்ளைகளுக்குத் தரமானக் கல்வி தேவைப்படுவதால்தான் அந்த முடிவு எனவும் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், எத்தனை அரசாங்கங்கள் மாறினாலும் அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறதேத் தவிர கல்வித் தரத்தை மீட்சியடையச் செய்வதற்கான முன்னெடுப்புகளுக்கு அல்ல என்பதும் வருத்தமான விஷயம்.

கடந்த வாரத்தில் ஆஃப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் மலேசியாவுக்கு மேற்கொண்ட வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய கல்வி அமைச்சோடு அவர்கள் கலந்துரையாடல் மேற்கொள்ள வந்திருந்தனர் என்று விளக்கமளித்த அமைச்சர் ஃபட்லினா மற்றொரு சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

சுமார் ஒரு ஆண்டுக்கு முன் பள்ளிகளில் ‘பாலஸ்தீன் வாரம்’ எனும் ஒரு இயக்கத்தை அவர் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து பிள்ளைகள் வரம்பு மீறி போலித் துப்பாக்கிகளை ஏந்தும் அளவுக்கு நிலைமை மோசமானதை நாம் இன்னும் மறக்கவில்லை.

தலிபான் அரசாங்கம் ஒரு பயங்கரவாதக் கும்பல் என அனைத்துலக நிலையில் கருதப்படுகிறது.

நாட்டு மக்களை மிக மோசமாக அவர்கள் நடத்தும் விதம் மற்றும் காட்டுமிராண்டித்தனமான தண்டனைகள் போன்றவை அந்நாட்டில் சர்வ சாதாரணம்.

இடைநிலைப் பள்ளிகளுக்கோ உயர்கல்வி நிலையங்களுக்கோ பெண்கள் செல்வதற்கு அந்நாட்டில் அனுமதியில்லை என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.

பெண்கள் கல்வி தொடர்பாக தலிபான்களின் அறிவுக் எண்களை திறத்த முயற்சிக்கப் போவதாக ஃபட்லினா குறிப்பிட்டுள்ளதும் நமக்கு வியப்பாகத்தான் உள்ளது.

அந்நாட்டுடன் மலேசியாவுக்கு அரசதந்திர உறவு கூட இல்லாத பட்சத்தில் அவர்களை ஏன் இங்கு அழைத்து வரவேண்டும் என ஜ.செ.க. மற்றும் ம.சீ.ச. தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கல்வித் துறை துணையமைச்சர் வொங் கா வோக்கிற்குக் கூடத் தெரியாமல் இந்த கலந்துரையாடல் நிகழ்வை ஃபட்லினா ஏற்பாடு செய்யவேண்டிய அவசியமென்ன எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

ஆக, ஒரு நாட்டின் கல்வித்தரம் மேம்பாடு கண்டுள்ள இதர நாடுகளுக்கு இணையாக உயர வேண்டுமென்றால் அதன் அமைச்சருக்கு போதுமான ஆற்றல் இருப்பது அவசியம் என்பதையே இது காட்டுகிறது.

அரசியலுக்கு முற்றிலும் புதியவரான ஃபட்லினா, எடுத்த எடுப்பிலேயே மிக முக்கியமான கல்வித் துறைக்கு அமைச்சராக நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.