கோவிட்-19: உலக அளவில் தற்போதைய நிலவரம் என்ன?

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, உலகம் முழுவதும் 185 நாடுகளில் கொரோனா வைரஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,43,512ஆக உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 1,54,215 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டிலுமே அமெரிக்கா தொடர்ந்து மிகவும் பாதிக்கப்பட்டதாக நாடாக விளங்குகிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் இதுவரை அமெரிக்காவில் 7,01,610 பேரும், அதற்கடுத்து ஸ்பெயினில் 1,90,839 பேரும், இத்தாலியில் 1,72,434 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பை பொறுத்தவரை அதிகபட்சமாக அமெரிக்காவில் 32,230 பேரும், ஸ்பெயினில் 20,002 பேரும், பிரான்சில் 18,681 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

போராட்டம் நடத்தும் மாகாணங்களில் ஊரடங்கை தளர்த்துங்கள்

நாட்டை முடக்கியதற்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா போன்ற அமெரிக்கா நாடுகளில் முடக்க நிலையைத் தளர்த்துங்கள் என டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகள் குடிமக்களை பாதிக்கின்றன என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர், ஆனால் அவற்றை தளர்த்துவது தொற்றுநோயைப் பரப்பக்கூடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,591 ஆக அதிகரித்ததுள்ளது. எனவே இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000 கடந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672,200 என ஜான் ஹோப்கின்ஸ் பலக்லைக்கழக தரவுகள் கூறுகின்றன. வட கலிஃபோர்னியா, மிச்சிகன், ஓஹியோ, உட்டா, வெர்ஜினியா உள்ளிட்ட நாடுகளில் தொடக்கநிலையைத் திரும்பிப் பெற வேண்டும் என்பதற்க்காக போராட்டங்கள் நடந்தது. போராட்டம் நடைபெறும் அமெரிக்காவின் அந்த மாகாணங்களை ஆள்வது ஜனநாயக கட்சியினர் என தனது ட்விட்டில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது’

ஒரு மாதம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலையின் காரணமாக ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 12ஆம் தேதி முதல் ஜெர்மனியில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஜென்ஸ் ஸ்பாஹ்ன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, ஜெர்மனியில் கொரோனா வைரஸின் பரவல் 0.7ஆக உள்ளது. அதாவது, நோய்த்தொற்று பாதித்த ஒருவரிடமிருந்து ஒருவருக்கும் குறைவாகவே அதன் பரவல் உள்ளது.

கொரோனா வைரஸால் பேரழிவை சந்தித்த இத்தாலி, ஸ்பெயின் அல்லது பிரான்ஸை விட ஜெர்மனியில் மிகவும் குறைவானவர்களே (3,868 பேர்) உயிரிழந்துள்ளனர். மேலும், 1,41,397 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17 நடந்தவை

ஈக்வேடார்: ஈக்வேடாரில், அதிகாரப்பூர்வ தகவல்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 403ஆக உள்ளது. ஆனால் தற்போதைய தகவல்படி அங்கு ஒரு மாகாணத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

உலக சுகாதார நிறுவனம்: கொரோனா பெருந்தொற்று பரவல் முடிந்ததும் உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள பிரச்சனைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.

மலேசியா: மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதேவேளையில் 221 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

ஜெர்மனி: ஜெர்மனியில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானதை அடுத்து அவர்களில் ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 17) புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1323ஆக உள்ளது.

BBC.TAMIL