தைபே: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான தைவானில், தன் கோர முகத்தை காட்டவில்லை.
பல்லாயிரம் கி.மீ., துாரத்தில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில், கொத்துக் கொத்தாக உயிர் பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், தைவானில்இதுவரை, 400 பேர் மட்டுமே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குட்டி நாடு
இந்த கொடிய கிருமியிடம் இருந்து, இந்த குட்டி நாடு, தங்களை எப்படி தற்காத்துக் கொண்டது? அது பற்றி, அந்நாட்டு அதிபர் சாய் இங் -வென், கூறியதாவது:கடந்த, 2003ல் ஏற்பட்ட, ‘சார்ஸ்’ வைரஸ் தொற்றுக்கு, தைவானில் ஏராளமான உயிர்களை இழந்தோம். அந்த மோசமான அனுபவம், எங்கள் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. எனவே, கடந்த ஆண்டு டிசம்பரில், சீனாவின் வூஹான் நகரில், கொரோனா தொற்று பரவத் துவங்கியதை கேள்விப்பட்டவுடன், எங்கள் அரசு விழித்துக் கொண்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துரிதமாக செயல்படுத்த துவங்கினோம். வூஹானில் இருந்து, தைவான் வந்து இறங்கும் பயணியரை, கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி, கண்காணிக்க துவங்கினோம். கடந்த ஜனவரியில், பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள்வதற்கு என்றே, மத்திய தொற்றுநோய் மையத்தை, பிரத்யேகமாக உருவாக்கினோம். இது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, விரிவான திட்டமிடுதலை, முன்கூட்டியே செய்ய துவங்கியது.பயண கட்டுப்பாடுகளும், அதிக ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள பயணியரை தனிமைப் படுத்துவதற்கான கறாரானவிதிமுறைகளும், வகுக்கப்பட்டன.
விபரங்கள் சேகரிப்பு
இந்நிலையில், கடந்த ஜனவரி, 21ல், தைவானின் முதல் கொரோனா தொற்று கண்டறியப் பட்டது. இதையடுத்து, பாதிப்புக்கு உள்ளாகும் ஒவ்வொருவரது பயண விபரங்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விபரங்கள், துல்லியமாக சேகரிக்கப்பட்டன.இந்த விபரங்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடி யாக தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால், மிகப் பெரிய சமூகப் பரவல், தவிர்க்கப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கள் மருத்துவ பணியாளர்களின் அயராத உழைப்பு, அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைப்பு தந்த மக்கள், அலுவலகங்கள், பொது இடங்களில், தொற்று ஏற்படுவதை தடுக்க, அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு, தனியார் வர்த்தக நிறுவனங்களும் உதவி புரிந்தது என, அனைவரும் ஒன்று கூடி, இந்த மாபெரும் போரை முன்னெடுத்து சென்றோம்.
தொற்று ஏற்பட துவங்கியதும், மக்கள் பதற்றத்தில், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிப்பதை தவிர்ப்பதற்காக, ஆரம்ப கட்டத்திலேயே, அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் வினியோகம் அதிகரிக்கப்பட்டன. நன்கொடைவிலை நிலவரங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. சந்தையில் எந்தப் பொருளும் இல்லை என்ற நிலை உருவாகாமல் கண்காணிக்கப்பட்டது.
பல தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து, முக கவசங்கள், தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டன. எங்கள் நாட்டுக்கு போக, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் முக கவசங்களை நன்கொடையாக வழங்கும் அளவுக்கு, உற்பத்தி அதிகரிக்கப் பட்டது.முக கவசம் வினியோகிப்பதில், ரேஷன் முறை பின்பற்றப்பட்டது. எனவே, பொது மக்களுக்கு தேவையான அளவு முக கவசங்கள் கிடைத்ததுடன், மருத்துவ ஊழியர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
சர்வதேச அளவில், மிகச்சிறந்த மருத்துவநிபுணர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் கொண்டது தைவான். எனவே, வைரஸ் தொற்று குறித்த உண்மையான தகவல்களை, ஒளிவு மறைவு இன்றி, மக்களுடனும், சர்வதேச அமைப்புகளுடனும் பகிர்ந்து கொண்டோம். கொரோனா தொற்று, எங்கள் நாட்டு எல்லைகளை கடந்து மற்ற நாடுகளுக்கு பரவாமல், தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
வெல்ல முடியும்
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா.,வில் இருந்து, நாங்கள் புறக்கணிக்கப்பட்டாலும், உற்பத்தி, மருந்து தயாரிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில், எங்கள் பலத்தை,மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். இன்றைக்கு, கடுமையான சவாலை உலகம் எதிர்கொண்டுள்ளது. நமக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே, சர்வதேச பேரிடரான கொரோனாவை நாம் வெல்ல முடியும். அதற்கு, இயன்ற உதவிகளை செய்ய, தைவான் என்றைக்கும் தயாராக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
malaimalar