பிரதமர் நஜிப்: பக்கத்தான் ஆட்சியில் மலாய்க்கார்களுக்கு அழிவு ஏற்படும்

மலாயக்கார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தைத் தற்காப்பதைத் தவிர வேறு வழியில்லை ஏனென்றால் மலாய்க்காரர்களின் எதிர்காலத்தையும் இஸ்லாத்தின் உன்னத்தையும் பாதுகாப்பதற்கு இது ஒன்றுதான் வழி என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.

“மாற்று வழியைக் காட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். கேட்கப்பட வேண்டிய கேள்வி இதுதான்: அவர்கள் தற்போதைய நிருவாகத்தைவிட சிறப்பாக இருக்க முடியுமா?

“நாம் தற்போது அனுபவிக்கும் சிறப்பு தகுதி (special position) சீரழிக்கப்படாது என்று அவர்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா?”, என்று அவர் மலேசிய இஸ்லாமிய சமய போதனை மற்றும் பொதுநல மன்ற (பெகிடா) உறுப்பினர்களிடம் இன்று ஷா அலாமில் பேசுகையில் கூறினார்.

மாற்று அமைப்பின் பெயரை நஜிப் கூறாவிட்டாலும், அவர் பக்கத்தானைத்தான் குறிப்பிடுகிறார் என்பது அவரது பேச்சின் நயத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தது

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவர்கள் அரசுப் பணியாளர் சேவையைப் பாதியாக குறைக்க விரும்புகின்றனர்…கொடியை மாற்ற விரும்புகின்றனர், மலாய் ஆட்சியாளர்களின் புனிதத்தை மாசுப்படுத்துகின்றனர் மற்றும் மலாய்க்காரர்களுக்கு உதவும் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்”, என்றாரவர்.

“நமக்கு கடவுளின் ஆசிர்வாதம் உண்டு”

தற்போதைய அரசாங்கம் முடிந்தவரையில் மலாய்க்காரர்களின் நலன்களைப் பாதுகாத்தும் இஸ்லாத்தை நிலைநிறுத்தியும் வந்துள்ளது என்று நஜிப் அக்கூட்டத்தினரிடம் கூறினார்.

கடந்த 54 ஆண்டுகளாக, ஆண்டவன் பாரிசானை அதிகாரத்தில் இருக்க அனுமதித்துள்ளார் ஏனென்றால் இக்கூட்டணி அனைவருக்கும் நியாயமாக இருந்து வந்துள்ளது.

“அரசமைப்பில் எதை நாம் புனிதமானது என்று கருதுகிறோமோ அதை நாம் மட்டுமே பாதுகாக்க முடியும், ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்…நாம் அதிகாரத்தை இழந்தால், நமது (மலாய்க்காரர்கள்) விதி மங்கிவிடும்.”

அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகள் (special rights) விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் உடன்படிக்கைக்கு இடமே இல்லை என்பதை நஜிப் வலியுறுத்தினார்.

“மலாய்க்காரர்-அல்லாதவர்கள் மலாய்க்காரர்களின் உணர்வுகளைக் கிளறக்கூடாது. பேசி, தீர்மானிக்கப்பட்டு விட்டதை மாற்ற வேண்டாம்”, என்று அந்த “பிரதமர் சந்திப்பு” என்ற நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

ஷா அலாம் போலிடெக்னிக் மண்டபத்தில் குழுமியிருந்த 2,000 க்குக் கூடுதலான பெகிடா உறுப்பினர்களும் திடலில் கூடாரத்தில் இருந்த 10,000 க்கு மேற்பட்ட இதரர்களும் ஆரவாரத்துடன் நஜிப்பின் உரைய வரவேற்றனர்.

பிரதமரின் உரை கடந்த வாரம் அம்னோ பேரவையில் அவர் ஆற்றிய தீவிரமான உரையைப் பிரதிபலித்தது.

TAGS: