சீனா வேண்டுமென்றே கொரோனாவை பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன், உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது.
இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடிதான் கிடக்கிறது.
இந்த நிலையில், “கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல; சீனாவில் உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது” என்று அமெரிக்காவின் ‘பாக்ஸ் நியூஸ்’ டெலிவிஷன் பிரத்யேக செய்தி ஒன்றை வெளியிட்டு, உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் அது தெரிவித்தது.
இந்தநிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவ துவங்குவதற்கு முன் சீனாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம். தடுத்து நிறுத்தப்படாததால், ஒட்டுமொத்த உலகமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிக்கப்பெரிய தவறு. ஆனால்
சீனா வேண்டுமென்றே கொரோனாவை பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்ன மாதிரியான விளைவுகள் என்பது குறித்து டிரம்ப் விரிவாக குறிப்பிடவில்லை.
சீனாவில் அந்த வைரஸ் எங்கிருந்து வந்திருந்தாலும், எந்த வடிவத்தில் வந்திருந்தாலும், அதன் காரணமாக இப்போது 184 நாடுகள் பாதித்துள்ளன.
உகானில் உள்ள அந்த 4-ம் நிலை ஆய்வுக்கூடத்துக்கு அமெரிக்கா அளித்து வந்த மானியத்தை நிறுத்திக்கொள்ளும். ஒபாமா நிர்வாகம்தான் அந்த ஆய்வுக்கூடத்துக்கு 3.7 மில்லியன் டாலர் (சுமார் ரூ.27 கோடியே 75 லட்சம்) நிதி வழங்கியது. அந்த நிதியை விரைவில் நிறுத்துவோம் என வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் கூறியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக 7.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
dailythanthi