சட்டத்தை மீறும் அரசியல்வாதிகள் – தடுமாற்றத்தில் முஹிடின்

இராகவன் கருப்பையா– மக்கள் தேர்ந்தெடுக்காத ஒரு வலுவற்ற அரசாங்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் முஹிடின் யாசின், நடமாட்டக் கட்டுப்பாட்டை பகிரங்கமாகவே மீறும் ஆளுங்கூட்டணி அரசியல்வாதிகளை கண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் இயலாமல் தவித்துக்கொண்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது.

சட்டத்தை மீறும் யாராக இருந்தாலும் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும் என பொது மக்கள் குமுறும் வேளையில் தோழமைக் கட்சிகளை பகைத்துக் கொள்ள முடியாமல், தவற்றை கண்டும் காணாததைப் போல் இருக்க வேண்டிய இக்கட்டான நிலையில் முஹிடின் தவிக்கிறார்.

இலவச உணவுக்காக சாலையோரங்களில் காத்திருக்கும் ஏழை முதியவர்கள் மற்றும் பசியால் பரிதவிக்கும் குழந்தைகளுக்கு பால் வாங்கச் செல்வோருக்கும் கூட குற்றப்பதிவு, அபராதம் அல்லது சிறைத் தண்டனை என்ற நிலை.

ஆனால் நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் கூடல் இடைவெளி போன்ற அத்தியாவசிய விதிகளை சற்றும் பொருள்படுத்தாமல் கட்சி உறுப்பினர்களுடன் விருந்தோம்பல் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும், ஆளும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த சில உயர்நிலை அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

சமூக சேவை என்ற போர்வையில் நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டின் புதல்வியையும் அவருடைய கணவரையும் பொது மக்கள் கடுமையாக சாடினார்கள்.

அதனால் சினமடைந்த அவர், ‘யாருக்காவது துணிச்சல் இருந்தால் என் மீது புகார் செய்யுங்கள் பார்ப்போம்’ என்று இறுமாப்பாக சவால் விட்டதையும் மக்கள் மறந்திடவில்லை.

இதற்கிடையே மற்ற நாடுகளில் நிலைமை வேறு. எந்த சூழ்நிலையாக இருந்தாலும், தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.

கடந்த வாரத்தில் தமது நாட்டின் நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய தென் ஆப்பிரிக்க தொடர்புத்துறை அமைச்சர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அதே போன்ற குற்றத்திற்காக நியூஸிலாந்தின் சுகாதார அமைச்சர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

ஸ்காட்லாந்தின் சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் அத்தகைய குற்றத்திற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் நம் நாட்டில் கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக நாடே போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முஹிடின் தமது தோழமைக் கட்சிகளின் சுயநல அரசியல் நெருக்கடியில் சிக்கித்தாவிக்கிறார் என்று நம்பப்படுகிறது.

சபா மாநில அம்னோ தலைவர் புங் மொக்தார் உள்பட அம்மாநிலத்தைச் சேர்ந்த சில அமனோ தலைவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய நியமனங்கள் வேண்டும் என முஹிடினுக்கு அஹ்மட் ஸாஹிட் கடந்த வாரத்திலிருந்து நெருக்குதல் கொடுத்து வருகிறார்.

ஆனால் புங் மொக்தாரும் அவருடைய மனைவியும் சம்பந்தப்பட்ட ஓர் ஊழல் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால் அவரை பரிசீலிக்கக் கூடிய நிலையில் முஹிடின் இல்லை.

ஆக ஒருபுறம் பங்காளிக் கட்சிகளை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை, மறுபுறம் அவர்கள் தவறு செய்தாலும் தண்டிக்க முடியாத நிலை. அவர்களை தண்டித்தால் ஆட்சிக்கு ஆபத்து, தண்டிக்காவிட்டால் பொது மக்களின் சினத்துக்கு ஆளாக வேண்டும்.

இதுபோன்ற தேவையில்லா மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் முஹிடினின் நிலை தற்போது, ‘ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்’ என்ற இக்கட்டான தடுமாற்றம்தான்.