மஸ்ஜித் இந்தியாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை

300க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள் இன்று கோலாலம்பூரில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு (பி.கே.பி.டி) கீழ் உட்பட்டுள்ள மஸ்ஜித் இந்தியாவில் பல பகுதிகளில் சோதனை நடத்தினர்.

முறையான ஆவணங்கள் இல்லாத அந்நிய நாட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு இச்சோதனை நடந்துள்ளது என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார்.

குடிவரவுத்துறை, காவல்துறை, மலேசிய ஆயுதப்படை, சுகாதார அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு படை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த சோதனை காலை சுமார் ஒன்பது மணிக்கு தொடங்கியது.

மலேசியாகினி நடத்திய ஆய்வில், சோதனையிடப்பட்ட கட்டிடங்களில் மலையன் மேன்ஷன், பிளாசா சிட்டி ஒன் மற்றும் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கட்டிடங்கள் அடங்கியுள்ளன.

மலையன் மேன்ஷனில் வசிக்கும் ஒருவரை தொடர்பு கொண்டபோது, குடிவரவுத்துறை ஒவ்வொரு வீட்டிலும் ஆவணங்களை ஆய்வு செய்ததாகக் கூறினார்.

“முறையான ஆவணங்கள் இல்லாதவர்ககளை கீழே இறங்கி வரச் சொன்னார்கள். பின் அவர்களை லாரியில் ஏறுமாறு சொன்னார்கள்,” என்று அவர் கூறினார்.

சிட்டி ஒன்னில், மதியம், முறையான ஆவணங்கள் இல்லாத பல வெளிநாட்டினர் கட்டிடத்தின் ஒரு மூலையில் கூடியிருப்பதைக் காண முடிந்தது.

“(அவர்கள்) திடீரென காலையில் வந்தார்கள்… குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் பற்றி அவர்கள் விசாரிக்கத் தொடங்கினர். அவர்கள் ஆவணங்கள் இல்லாத (வெளிநாட்டு) தொழிலாளர்களை கூட்டிச் சென்றதாக நான் நினைக்கிறேன்.”

“பல லாரிகள் அந்நிய நாட்டவர்களைக் ஏற்றிக்கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியேறியதை என்னால் காண முடிந்தது,” என்று அவர் கூறினார்.

எந்த ஆவணமும் இல்லாத வெளிநாட்டினரை விசாரிப்பதாக மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்.

“அவர்கள் சுமார் மூன்று மணி நேரம் வீடு வீடாக சோதனை செய்தனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

இன்று பிற்பகல் நான்கு மணியளவில், நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இது குறித்து, அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து மலேசியாகினி கைருல் டைமியை தொடர்பு கொண்டுள்ளது.