பீஜிங் : சீனாவில், கொரோனா அறிகுறி எதுவும் இல்லாமல், அதேசமயம், வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.அங்கு, நேற்று முன்தினம் இருமல், காய்ச்சல், தொண்டையில் வறட்சி என, எந்த விதமான அறிகுறியும் இல்லாத, 25 பேருக்கு, கொரோனா பாதிப்பு உள்ளது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அறிகுறி இல்லாமல், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 981 ஆக அதிகரித்துள்ளது.அதில், கொரோனா தோன்றிய வூஹான் நகரில் உள்ள, 631 பேரும் அடங்குவர். அதேசமயம், தொடர்ந்து, 27 நாட்களாக, புதிய பாதிப்பு எதுவும் இல்லை என, ஹூபே மாகாண சுகாதார துறை அறிவித்துள்ளது.
இம்மாகாணத்தில், 68 ஆயிரத்து, 128 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது. அதில், வூஹானில் மட்டும், 50 ஆயிரத்து, 333 பேர் இருந்தனர்.கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த, 2 லட்சத்து, 82 ஆயிரத்து, 482 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில், 1,434 பேர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். சீனா முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை, 82 ஆயிரத்து, 874ஆக இருந்தது. அதில், 77 ஆயிரத்து, 642 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 4,633 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை வெற்றிகரமாக தடுத்து, பலியை குறைத்துள்ள சீனாவில் தற்போது இயல்பு நிலை திரும்பி விட்டது.
இந்நிலையில், சீன அரசு, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.இதனால், ‘மக்கள் அதிகம கூடும் சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு மையங்களில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை, தீவிரமாக கையாள வேண்டும்’ என, சீன பிரதமர், லீ கெகியாங் உத்தரவிட்டுள்ளார்.
எங்காவது, கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்தால், உடனடியாக அந்த இடத்தை தனிமைப்படுத்தி, நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.அவருடன் தொடர்பில் உள்ளோரின் விபரங்களை சேகரித்து, பரிசோதனை மேற்கொள்ளவும், மாகாண அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரண்மனை திறப்பு
சீனாவில், தலைநகர் பீஜிங் அருகே உள்ள புராதன அரண்மனை மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தினமும், 80 ஆயிரம் பேர் அரண்மனையை பார்க்க அனுமதிக்கப்படுவர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது, 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என,தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பீஜிங்கில், பூங்காக்களும் திறக்கப்பட்டுள்ளன. அங்கும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில், வெப்ப மானி சோதனை, கிருமி நாசினி பயன்பாட்டிற்கு பின்னரே, மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
dinamalar