இத்தாலியில் சுமார் 2 மாதம் அமலில் இருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் முக கவசம் அணிந்தபடி சென்ற பொதுமக்கள்.
ரோம்: ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதன் முதலில் இத்தாலி தான் அமல்படுத்தியது. தற்போது வரை இத்தாலியில் 2 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 28 ஆயிரத்து 884 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
எனினும் அங்கு கடந்த 2 வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் இத்தாலியில் சுமார் 2 மாதம் அமலில் இருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கட்டுமான பணி நடைபெறும் இடங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றில் பணிபுரிந்த சுமார் 40 லட்சம் பேர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். உணவகங்கள் திறந்திருந்தாலும் அங்கு பார்சல்கள் மட்டுமே வழங்க கட்டுப்பாடு உள்ளது.
ஊரடங்கு தளர்வு மக்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும் கொரோனா குறித்த அச்சத்துடனேயே அவர்கள் நடமாடுகின்றனர். முக கவசம் அணிந்திருப்பதுடன் சமூக இடைவெளியையும் கடைப்பிடித்து வருகின்றனர்.
malaimalar