ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் தலீபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனால் தலீபான் பயங்கரவாதிகள் அங்கு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ராணுவமும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் ஹெல்மண்ட் மாகாணம் நஹ்ரி சர்ராஜ் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி அதனை ராணுவ முகாமின் நுழைவாயில் மீது மோதி வெடிக்க செய்தார். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கரும்புகை மண்டலம் உருவானது. கார் குண்டு வெடிப்பில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் ராணுவ முகாமின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.எனினும் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான பாக்டிகாவில் கயிர்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி எறிந்தனர்.
இதில் அப்பாவி மக்கள் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
malaimalar