ஐக்கிய அரபு அமீரகத்தில் 47 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

தீ விபத்து நடந்த அப்கோ டவர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் 47 மாடிகளை கொண்ட அப்கோ டவர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது மிகப்பெரிய நகரமான ஷார்ஜாவில் அல் நஹ்தா என்ற இடத்தில் 47 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. அப்கோ டவர் என்று அழைக்கப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியர்கள் பெருமளவு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் ஏற்பட்ட தீ, கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது.

இதனால் வீடுகளுக்குள் இருந்த மக்கள் அலறியடித்தபடி குடியிருப்பு கட்டிடத்தை விட்டு வெளியேற தொடங்கினர். சற்று நேரத்துக்குள்ளாக கட்டிடம் முழுதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 300 குடும்பங்களை பத்திரமாக மீட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு, தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பல உயிர்கள் பேராபத்தில் இருந்து தப்பின. எனினும் இந்த விபத்தில் 9 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

malaimalar