பாஸ்: அரசாங்கச் சேவையில் “எதிர்ப்பு” உருவாகும்

அரசாங்கச் சேவையில் உயர் நிலைப் பதவிகளுக்கு “வெளி நிபுணர்கள்” நியமிக்கப்படுவதை அனுமதிக்கும் முறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என பாஸ் கூறுகிறது.

காரணம் அத்தகைய நடவடிக்கை அரசாங்க ஊழியர்களிடையே ஆத்திரத்தை மூட்டி விடும் என அது தெரிவித்தது.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் குறிப்பாக மூத்த பதவிகளில் உள்ளவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். ஏனெனில் அதில் அவர்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்டுள்ளது,” என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் ஒன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

“அதில் அரசாங்கம் பின் வாங்கா விட்டால் அரசாங்க ஊழியர்களுடைய எதிர்ப்பை அது எதிர்நோக்க வேண்டியிருக்கும்.”

அரசாங்கச் சேவை புத்தாக்க உணர்வுடன் செயல்பட வேண்டியதின் அவசியத்தை ஒப்புக் கொண்ட மாஹ்புஸ், அந்த உயர் நிலைப் பதவிகளுக்கு ஆற்றல் மிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பதற்கு வகை செய்யும் பொருட்டு நடைமுறைகளை சீர்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Jusa, Turus போன்ற உயர் நிலைப் பதவிகளுக்கு (தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரிக்கு இணையான பதவிகள்) தனியார் துறையச் சார்ந்தவர்கள் உட்பட “வெளி நிபுணர்கள்” நியமிக்கப்படலாம் என்று கடந்த வாரம் உத்துசான் மலேசியா இணையப் பதிப்பு செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தப் பதவிகளில் அரசாங்கத் தலைமைச் செயலாளர், பல்வேறு அமைச்சுக்களின் தலைமைச் செயலாளர் பதவிகளும் அடங்கும்.

TAGS: