சீனாவுக்கு எதிராக உலக சுகாதார மன்றத்தில் வருது தீர்மானம்

ஜெனீவா :கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை, சீனா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற குரல், அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பலமாக எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் கொள்கைகளை வகுக்கும், உலக சுகாதார மன்றத்தின், 73வது மாநாடு, வரும், 18ம் தேதி, சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது. இதில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு உட்பட, சர்வதேச அளவில் ஆய்வு நடத்தக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக, ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்தில், கொரோனா தோன்றி பரவியது தொடர்பான விபரங்களை சீனா வெளியிட வேண்டும் என்ற ஷரத்தை சேர்க்க, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முயற்சி மேற்கொண்டுஉள்ளன.

சீனா மீது டிரம்ப் தொடர்ந்து புகார்

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என, பலமுறை அறிவித்துள்ளார். அத்துடன், உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, அந்த அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின், தலைவர் உர்சுலா வன் டர் லெயன், கொரோனா தோன்றியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து, பிரிட்டன் பாதுகாப்பு துறை செயலர், பென் வாலசும், ‘கொரோனா பரவலில், சீனா, தன் பங்கை, ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும்’ என, கூறியுள்ளார்.

இவ்வாறு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து, தனக்கு எதிராக வரிந்து கட்டுவதை கண்ட சீனா, உலக அரங்கில் தன் மீதான களங்கத்தை துடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. சீன துாதரக அதிகாரிகள், ஜெர்மன் அரசு அதிகாரிகளை சந்தித்து, கொரோனா பிரச்னையில் சாதகமான அறிக்கை வெளியிட வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஜெர்மன் அரசு மறுத்து விட்டது. இந்நிலையில், உலக சுகாதார மன்றம் நிறைவேற்ற உள்ள தீர்மானம், சீனாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாடுகளின் கேள்விகள்

* டிசம்பர், 2019ல் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் குறித்து, சீனா உடனே உலகிற்கு தெரிவித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தாதது ஏன்?
* வூஹான் நகரில் இருந்து, பிற நாடுகளுக்கு. தன் விமான சேவையை நிறுத்தி விட்டு, மற்ற நாடுகளின் விமான சேவைக்கு மட்டும் அனுமதி அளித்தது ஏன்?
* சீன விஞ்ஞானிகளின் கொரோனா வைரஸ் ஆய்வை முடக்கியது ஏன்?
* கொரோனாவை கண்டுபிடித்த, லி வென்லியாங் உள்ளிட்ட மருத்துவர்கள், அது குறித்த எச்சரிக்கையை, கடந்த ஆண்டு டிசம்பரில், ‘விசாட்’ குழு மூலம் பகிர்ந்த குற்றத்திற்காக, சிறையில் அடைத்து வைத்தது ஏன்?

malaimalar