அமெரிக்கா மீண்டு வர அதிக காலமாகும் ; அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆரூடம்

வாஷிங்டன் : ‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்து விட்டார்’ என, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ள, ஜோ பிடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார், முன்னாள் துணை அதிபரான, ஜோ பிடன். மிகப்பெரிய பாதிப்புவாஷிங்டனில், ‘டிரம்பின் பொருளாதார பேரழிவு’ என்ற தலைப்பில், ஜோ பிடன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த, 2009ல் உலக நாடுகள் சந்தித்த மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியைவிட, தற்போது மிகப் பெரிய பாதிப்பை, அமெரிக்கா சந்தித்து வருகிறது.வேலையில்லாதோர் எண்ணிக்கை, 14.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதற்கெல்லாம், கடந்த, மூன்று ஆண்டுகளாக, அதிபர் டொனால்டு டிரம்பின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளே காரணம். நாட்டின் முதுகெலும்பாக உள்ள, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு, கடந்த, மூன்று ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை; தற்போதும் செய்யவில்லை.

டிரம்ப், மிகப் பெரிய மூன்று தவறுகளை செய்துள்ளார். முதலில், பங்குச் சந்தை பொருளாதாரத்தை அவர் சரியாக கவனிக்கவில்லை. இரண்டாவது, பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்காக மட்டுமே அவர் செயல்பட்டார். ‘நடுத்தர வர்க்க மக்களை மறக்க மாட்டோம்’ என்று தான் கூறியதை, டிரம்ப் மறந்ததே, மூன்றாவது பெரும் தவறு. தோல்வி வைரஸ் பாதிப்பை தடுப்பதில் மிகப் பெரிய தோல்வியை டிரம்ப் சந்தித்துள்ளார்.

நாட்டை, இந்த இக்கட்டிலிருந்து மீட்க, என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை, ஒவ்வொன்றாக விரைவில் அறிவிப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.சீனா மீது மீண்டும் தாக்குதல்வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என, அதன் மீது, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் போம்பியே கூறியதாவது:சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வுக் கூடத்தில் இருந்து தான், இந்த வைரஸ் பரவியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. ஆனால், சீனா இதை மறுத்து வருகிறது. அப்படியானால், வூஹானில், முதல் நபருக்கு எப்படி வரைஸ் தொற்று ஏற்பட்டது, அது எப்படி மற்றவர்களுக்கு பரவியது, இந்த வைரஸ் இருப்பது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல்களை சீனா அளிக்குமா.

சீனா தொடர்ந்து தகவல்களை மறைத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு, அதை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் மன்னர், சல்மான் பின் அப்துல்ஆஜிஸ் அல்சூத், ஜெர்மனி பிரதமர், ஏஞ்சலா மார்க்கெல், மலேசிய பிரதமர் முஹ்யுதின் யாசின் ஆகியோருடன், தொலைபேசியில் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.

dinamalar