‘ஊரடங்கை தளர்த்தினால் மரணங்கள் அதிகரிக்கும்’: டிரம்புக்கு மருத்துவர் எச்சரிக்கை

வாஷிங்டன்: ‘அமெரிக்காவில் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்தால், தேவையற்ற மரணங்கள் அதிகரிக்கும்’ என, மருத்துவர் ஆண்டனி பெவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகளவில் இதுவரை, 42.61 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் அமெரிக்காவில் மட்டும், 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 83,019 பேர் உயிரிழ்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 3.3 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அதில் சில ஆயிரம் பேர், ஊரடங்கை தளர்த்தி பணிக்கு செல்ல அனுமதி வழங்கக் கோரி, பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக, ‘ஊரடங்கை தளர்த்த வேண்டும்’ எனக் கூறினார். ‘பாதிப்பை உணராமல் டிரம்ப் இவ்வாறு தெரிவிக்கிறார்’ என, மாகாண ஆளுநர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில், அமெரிக்காவின் முகமாக இருக்கும், மருத்துவர் ஆண்டனி பெவுசி, ‘அமெரிக்காவில் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்தால், தேவையற்ற மரணங்கள் அதிகரிக்கும்’ என, அமெரிக்க செனட்டுகளிடம் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் டிரம்ப் கருத்துக்கு, மருத்துவர் பெவுசியின் கருத்து, முற்றிலும் முரணானது என்பது குறிப்பிடத்தக்கது.

dinamalar