ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதி சடங்கில் குண்டு வெடிப்பு – 40 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதி சடங்கின்போது நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
காபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தலீபான்களுடன் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
அதே போல் ஆப்கானிஸ்தான் அரசும் தலீபான்களுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தொடர்ந்து, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் தலீபான் பயங்கரவாதிகள் தாமாக முன்வந்து சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி அமைதியை கடைப்பிடித்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசு கோரிக்கை வைத்தபோதிலும் ரமலான் மாதத்தில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த தலீபான்கள் மறுத்துவிட்டனர்.
அதே நேரத்தில் அவர்கள் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீசார் மற்றும் ராணுவவீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள கெவா மாவட்டத்தில் தலைமை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஹாஜி ஷேக் இக்ராம் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் இறந்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று காலை அவரது சொந்த ஊரில் அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது. மூத்த போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் ஹாஜி ஷேக் இக்ராமின் இறுதி சடங்கில் பங்கேற்றனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
குண்டு வெடிப்பில் சிக்கி 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் தலீபான்களே இந்த தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே தலைநகர் காபூலில் சர்வதேச நாடுகளை சேர்ந்த டாக்டர்கள் பணியாற்றும் ஆஸ்பத்திரிக்குள் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும், பயங்கரவாதிகளுக்கும் ராணுவவீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
dailythanthi