அமெரிக்காவில் வேலை பறிபோயும் நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் அவதி – பின்னணி என்ன?

எச்-1பி விசா

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் வேலை பறிபோன நிலையில், இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத நிலையால் அவதிப்படுகின்றனர். இது குறித்த பரபரப்பு பின்னணி தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்காவை கொரோனா வைரஸ் திண்டாட வைத்துள்ளது. பிற நாடுகளை விட இந்த நாட்டில் அதன் தாக்கம் மிக அதிகளவில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு எச்-1பி விசா பெற்று வேலை பார்த்து வந்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஏராளமானோர் வேலைகளை இழந்துள்ளனர். எத்தனை இந்தியர்கள் அங்கு வேலை இழந்துள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும் கூட கணிசமான இந்தியர்களுக்கு வேலை போய் இருப்பது தெரிய வந்துள்ளது.

3 கோடியோ 30 லட்சம் அமெரிக்கர்களுக்கும் கூட வேலை பறிபோய் உள்ளது.

அந்த நாட்டு சட்டப்படி எச்-1பி விசா பெற்று அங்கு வேலை பார்த்து வந்த வெளிநாட்டினர் வேலையை இழந்தால், 2 மாத காலத்தில் புதிய வேலையை தேடிக்கொண்டு விட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் தாய்நாட்டுக்கு திரும்பி விட வேண்டும்.

இப்போது புதிதாக வேலை தேடிக்கொள்ள முடியாத சூழல் நிலவுவதால், இந்த 2 மாத கெடுவை 6 மாதங்களாக உயர்த்த வேண்டும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு மனு அளிக்கும் இயக்கம் ஒன்றை அவர்கள் தொடங்கினர்.

இதில் டிரம்ப் நிர்வாகம் என்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய விமான சேவையை பல நாடுகளும் முடக்கி உள்ள நிலையில், இந்தியாவின் சார்பில் பல நாடுகளுக்கு வந்தோபாரத் மிஷன் என்ற திட்டத்தின்கீழ் ஏர் இந்திய விமானங்களை அனுப்பி அங்கு சிக்கி தவிக்கிற இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி அமெரிக்காவுக்கும் ஏர் இந்தியா விமானம் சென்றது. அங்கு வேலை இழந்து நாடு திரும்ப எண்ணிய சிலரால் இந்த விமானத்தில் ஏறி தாய்நாடு திரும்ப முடியாமல் போய் விட்டது.

நெவார்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் பாண்டே என்ற தம்பதியர் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது) தங்கள் குழந்தைகளுடன் நாடு திரும்ப இருந்தனர். அந்த தம்பதியருக்கு 6 வயதிலும், 1 வயதிலும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த குழந்தைகளுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் டிக்கெட் வழங்க மறுத்து விட்டது. பாண்டே தம்பதியரிடம் இவ்வளவுக்கும் இந்திய விசா இருக்கிறது. இந்த தம்பதியர் இந்தியர்கள், ஆனால் அவர்களது 2 குழந்தைகளும் அமெரிக்கர்கள். இதில்தான் சிக்கல்.

இதுபற்றி அந்த தம்பதியர் கூறும்போது, “ஏர் இந்தியா மற்றும் இங்குள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் எவ்வளவோ ஒத்துழைப்பு தந்தனர். ஆனாலும், அவர்கள் தங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி விட்டனர். இதற்கு காரணம், இந்திய அரசு சமீபத்தில் பிறப்பித்த ஒரு விதிதான்” என்று கூறுகின்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் விசாக்கள், விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அட்டை (ஓ.சி.ஐ. அட்டை), கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என இந்திய அரசு கடந்த மாதம் ஒரு ஒழுங்குமுறையை பிறப்பித்து அதை கடந்த வாரம் புதுப்பித்துள்ளது.

இது அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப தடைச்சுவராக அமைந்துள்ளது.

இதுபற்றி பாண்டே தம்பதியர் கூறும்போது, “இந்திய அரசு பிறப்பித்துள்ள விதிமுறையை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம்” என குறிப்பிட்டனர்.

தற்போது இவர்கள் வேலை இழந்த நிலையிலும், இந்தியா திரும்ப முடியாமல் போய்விட்டதால், தாங்கள் அங்கு தங்கும் காலத்தை நீட்டிக்குமாறு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு அமைப்பிடம் முறையீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதே போன்று மம்தா என்ற இந்திய பெண்ணுக்கும் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது) நேரிட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு பிறந்து மூன்று மாதங்களே ஆன ஆண் குழந்தை இருக்கிறது. இந்த பெண்ணுக்கு இந்தியர் என்பதால் ஏர் இந்தியா டிக்கெட் கொடுத்தது. ஆனால் அவரது குழந்தை அமெரிக்காவில் பிறந்ததால் அந்த நாட்டின் பாஸ்போர்ட்தான் உள்ளது. இதனால் அந்தப் பெண் தன் குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் போய் உள்ளது.

இதுபற்றி மம்தா கூறுகையில், “எங்களை நாடு திரும்ப இந்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இனியும் நான் அமெரிக்காவில் தங்க விரும்பவில்லை. நான் மட்டும் இங்கு உள்ளேன். என் உறவினர்கள்கூட யாரும் இல்லை. இது ஒரு கடினமான சூழ்நிலை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும், “ வந்தோபாரத் மிஷன் என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இது மனிதாபிமானமான திட்டம். ஆனால் இது மனிதாபிமானமற்ற திட்டமாகவும் ஆகி விட்டது” என வேதனையுடன் கூறினார்.

இதே போன்று வாஷிங்டன் டி.சி.யில் இருந்து ராகேஷ் குப்தா என்ற இந்தியர் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது) வேலை இழந்த நிலையில் தனது மனைவி கீதா, மற்றும் 2½ வயது மகளுடன் நாடு திரும்ப இருந்தனர். ஆனால் மகளுக்கு வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை (ஓ.சி.ஐ. அட்டை) இருந்ததால் இந்திய அரசின் விதிமுறை காரணமாக நாடு திரும்ப அனுமதி இல்லாமல் போய்விட்டது.

இப்படி பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் அனைவரும் தாங்கள் இந்தியா திரும்புவதற்கு இந்திய அரசு உதவி செய்ய வேண்டும், இது தொடர்பான விதிமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

malaimalar