போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை கொண்டு வருவேன்- டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவத்தை கொண்டு வருவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கள்ள நோட்டு புகாரில் அவரை கைது செய்த வந்த காவல்துறை அதிகாரி, அவரை காரை விட்டு வெளியே தள்ளி தனது காலால் கழுத்தை அழுத்தும் வீடியோ வெளியானது. சுற்றி இருந்த மற்ற மூன்று போலீஸ்காரர்களும் அவரை தடுக்கவில்லை.  ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத் திணறி மரணம் அடைந்தார்.

கருப்பினர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று கருப்பின மக்கள் ஆவேசமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும்  பெரும் மோதல்கள் வெடித்துள்ளன. பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் விரட்டியடிக்கின்றனனர்.

பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போராட்டம், இனவெறிக்கு எதிரான போராட்டமாக வலுவடைந்து வருகிறது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிடிவாதமாக இருக்கிறார்.

பல இடங்களில் கலவரம், வன்முறை, தீவைப்பு, பொருட்கள் சூறை என  நீண்டுகொண்டே செல்லும் நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அதிபர் டிரம்ப் நம்பிக்கை அளிக்கும் வகையில் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மாறாக, போராட்டக்காரர்கள் அத்து மீறுவதை தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது என கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். போராட்டக் காரர்களிடம் மண்டியிட முடியாது என்றும், ராணுவத்தின் உதவியுடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.

மேலும் நேரத்தை வீணடிக்காமல் போராட்டக்காரர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார்.

இவ்வாறு பேசிய டிரம்புக்கு ஹூஸ்டன் காவல்துறைத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போராட்டத்தில் மிகவும் பொறுப்பற்று நடந்துகொள்வதாகவும், அவர் ஏதாவது ஆக்கப்பூர்வமாகச் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்கலாம் என்றும் கூறினார்.

மேலும் ஆளுமையைக் காட்டும் நேரம் இதுவல்ல, மக்களின் மனங்களை வெல்ல வேண்டிய நேரம் என்பதை அதிபர் உணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

malaimalar