புவா: கடந்த கால ஊழல்கள் தற்காப்புத் தளவாட ஒப்பந்தங்கள் ஆய்வு செய்யப்படுவதை அவசியமாக்கியுள்ளது

தற்காப்புச் செலவுகள் மீது இரு தரப்பு நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவை அமைப்பதற்கான தேவையை நிராகரிக்க தற்காப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது, அதனிடம் வெளிப்படையான போக்கும் பொறுப்புணர்வும் இல்லை என்பதைக் காட்டுவதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.

அந்த நிலை, அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டத்துக்கு முரணாக அமைந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

“மலேசிய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளிலும் உள்ள மதிப்பீட்டுக் குழுவின் ஆற்றல், வெளிப்படையான போக்கு குறித்து தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக” தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அறிக்கை வெளியிட்டிருப்பது,  அத்தகைய கோட்பாடுகளை அவர் இறுமாப்புடன் மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது,” என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவருமான புவா சொன்னார்.

“கூடின பட்சம் 12 புள்ளிகளைக் கொண்ட குறியீட்டில் மலேசியாவுக்கு 4.5 புள்ளிகளை மட்டுமே வெளிப்படையான போக்கு மீதான அனைத்துலக நிறுவனம் வழங்கியுள்ளது சரியே என்பதையும் அது மெய்பிக்கிறது. 37.5 விழுக்காடான அந்த புள்ளிகள் தோல்விக் குறியீட்டுக்குக் கீழானதாகும். தற்காப்புச் செலவுகள் மீது கடந்த மாதம் அந்த அனைத்துலக அமைப்பு அந்த மதிப்பீடுகளை வெளியிட்டது.”

மலேசியா மற்ற நாடுகளைக் காட்டிலும் கீழ் நிலையில் உள்ளது. காரணம் அதன் வரவு செலவுத் திட்டத்தில் விவரங்கள் இல்லை. அத்துடன் அந்த இரகசியத் திட்டங்கள் மீது கணக்காய்வும் செய்யப்படுவதும் இல்லை என வெளிப்படையான போக்கு மீதான அனைத்துலக நிறுவனத்தின் தற்காப்பு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பிரிவின் இயக்குநர் மார்க் பிமன் கூறினார்.

அந்தக் குறியீட்டில் ஆப்கானிஸ்தான், ருவாண்டா, ஜார்ஜியா, அஸர்பைஜான் ஆகியவற்றுடன் மலேசியா வைக்கப்பட்டுள்ளது. வங்காள தேசம், இந்தோனிசியா, பாப்புவா நியூகினி ஆகியவற்றுக்குக் கீழ் நிலையில் அது உள்ளது.

அந்த அனைத்துலக நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இடம் பெற்ற நாடுகளில் 14 விழுக்காடு உயர்ந்த புள்ளிகளைப் பெற்றுள்ளன. அவை வலுவான ஜனநாயக முறைகளைப் பின்பற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆகும்.

TAGS: