நியூசிலாந்தில் கொரோனா தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளும் இன்னும் சில மணி நேரங்களில் தளர்த்தப்படவுள்ளன.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளன. பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கும் தடை இல்லை. ஆனால் மற்ற நாடுகளுடனான நியூசிலாந்தின் எல்லைகள் மூடப்பட்டிருக்கும்.
இரண்டு வாரங்களாக நியூசிலாந்தில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நியூசிலாந்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்ற தகவலை கேட்டதும், மகிழ்ச்சியில் சின்னதாக நடனம் ஆடியதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.
”கோவிட் 19 பாதிப்பிற்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்கு அவ்வளவு எளிதாக நாம் சென்றுவிட முடியாது. ஆனால் உடல் நலம் மீதும் சுகாதாரத்துறை மீதும் இருந்த அதிக கவனம் தற்போது பொருளாதார கட்டமைப்பு மீது செலுத்தப்பட வேண்டும். நமது கடமைகள் முடிவடைந்துவிடவில்லை. ஆனால் இது ஒரு மைல்கல் என்பதை மறுப்பதற்கில்லை” என செய்தியாளர்கள் சந்திப்பில் உரை நிகழ்த்தி நாட்டு மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார் அவர்.
கடந்த மார்ச் 25ம் தேதி நியூசிலாந்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நான்கு கட்டங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தளர்த்தப்பட்டும் வந்தன. ஐந்து வாரங்கள் முடிவடைந்து, ஏப்ரல் மாதத்தில் உணவு கடைகளில் இருந்து பார்சல் வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது, அத்தியாவசம் அல்லாத சில வர்த்தகங்களும் இயங்க துவங்கின.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்ததால் தற்போது மே மாதம் இன்னும் சில கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன.
எனவே ஜூன் 22ம் தேதி முழுமையாக ஊரடங்கை தளர்த்த நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடைந்ததால் திட்டமிட்டதற்கு 17 நாட்கள் முன்பாகவே ஊரடங்கை தளர்த்த தயாராகவுள்ளது என நியூசிலாந்து என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
சில மணி நேரங்களில் முழுமையாக முடக்கநிலை நீக்கப்பட்ட பிறகு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களைத் திறக்கலாம், திருமணங்கள், இறுதிசங்குகள் அனைத்தும் இயல்பாக நடத்தலாம். பொது போக்குவரத்தும் கட்டுப்பாடுகள் இன்றி இயல்பாக இயக்கப்படும்.
சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவு இல்லை, அனால் கடைபிடித்தால் அதுவும் நன்மை அளிக்கும் என அறிவுரை வழக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கட்டாயம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸை முழுமையாக அழிப்பது என்பது ஒரு கட்டத்தில் செய்து முடித்து, நிறைவேற்றப்படும் செயல் அல்ல, அது காலத்தின் முயற்சி என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் மொத்தமாக 1,154 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, 22 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் நியூசிலாந்து கொரோனாவை எதிர்கொண்ட விதம் பரவலாக பாராட்டப்பட்டது.
BBC TAMIL