அமெரிக்காவில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை கடும் எதிர்ப்பால் போலீஸ் அதிகாரி ராஜினாமா

அட்லாண்டா: அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அட்லாண்டாவில் கறுப்பினத்தைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞரை, போலீசார் சுட்டுக் கொன்றனர்.

கலவரம் வெடித்ததை அடுத்து, அட்லாண்டா தலைமை போலீஸ் அதிகாரி ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது, தொடர்ந்து அடக்குமுறை ஏவப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.போராட்டம்சமீபத்தில், ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை, போலீசார் கடுமையாக தாக்கினர். இதில், அவர் பரிதாபமாக பலியானார்.

இதையடுத்து, அமெரிக்கா முழுதும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மற்ற நாடுகளுக்கும் இந்த போராட்டம் பரவி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள உணவகத்துக்கு அருகே நடந்த மோதலில், ரைசார்டு புரூக்ஸ், 27, என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டு போராட்டத்தில் இறங்கினர். சாலைகளை மறைத்து, போக்குவரத்தை முடக்கினர்.

சம்பவம் நடந்த உணவகமும், போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. நிலைமை மோசமானதை அடுத்து, அட்லாண்டா தலைமை போலீஸ் அதிகாரி எரிகா ஷீல்டு, தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து, அட்லாண்டா நகர மேயர் கெய்ஷா லேன்ஸ் கூறியதாவது:அட்லாண்ட நகரில் உள்ள உணவகத்திற்கு வரும் வழியை மறித்து, ரைசார்டு புரூக்ஸ் என்ற இளைஞர், கரை நிறுத்தி விட்டு, காருக்குள் துாங்கியதாக கூறப்படுகிறது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவரை, அந்த இடத்திலிருந்து கிளம்பும்படி கூறினர்.

அப்போது, போலீசாருக்கும், அந்த இளைஞருக்கும் வாக்குவாதம் முற்றியது. போலீசாரிடமிருந்து துப்பாக்கியை பறித்து, அந்த இளைஞர் ஓடியுள்ளார். போலீசார், அவரை பிடிக்க முயன்றபோது, துப்பாக்கியால் சுட முயற்சித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார், அந்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், இது குறித்து விரிவான, வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைஎப்படியிருந்தாலும், உயிரிழப்பை ஏற்படுத்தும் விதமாக போலீசார் செயல்பட்டதை ஒருபோதும் ஏற்க முடியாது.

இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, அட்லாண்டா தலைமை போலீஸ் அதிகாரி ராஜினாமா செய்துள்ளார். தற்காலிகமாக, ரோட்னி பிரயன்ட் தலைமை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். ரைசார்டு புரூக்சின் உறவினர் கிறிஸ்டல் புரூக்ஸ் கூறியதாவது:ரைசார்டு புரூக்ஸ், யாருக்கும் தீங்கு இளைக்காத குணம் உடையவர். காருக்குள் இருந்த புரூக்சை கட்டாயப்படுத்தி, வெளியே இழுத்து வந்து போலீசார் தாக்கியுள்ளனர்.இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். புரூக்ஸ் இறப்புக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

dinamalar