நேபாளம்: அரசுக்கு எதிராக மாணவர்கள் திடீர் போராட்டம்

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள்

நேபாளத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறி அந்நாட்டில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்மண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் கேபி ஒலி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நேபாளத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, அந்நாட்டில் 6 ஆயிரத்து 211 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,041 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காத்மண்டில் நேற்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது கொரோனா வைரசை கட்டுப்படுத்த நேபாள அரசு தவறி விட்டதாக கோஷங்களை எழுப்பினர்.

மேலும், பிரதமர் ஒலி தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் கூறியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட பல மாணவர்களை கைது செய்தனர். எல்லை விவகாரத்தில் இந்தியா-நேபாளம் இடையே முரண்பாடு நிலவி வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது

malaimalar