மோதல்களை தொடர சீனா விரும்பவில்லை- பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு

சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான்

எல்லைப்பிரச்சினை தொடர்பாக இனி எந்த ஒரு மோதலையும் சந்திக்க சீனா விரும்பவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பீஜிங்: லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-சீன படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

அதேசமயம் இந்த மோதலைத் தொடர்ந்து, எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எல்லை பிரச்சினையில் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பாக, இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, லடாக்கில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது என்று கூறிய அவர், ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தை முலம் தீர்க்க இந்தியா முன்வரவேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

‘இனி எந்த ஒரு மோதலையும் சந்திக்க சீனா விரும்பவில்லை. எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. நடந்ததில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளது. இந்திய துருப்புகள் நெறிமுறைகளை மீறி சீன துருப்புகளை தாக்கியது.

கால்வான் பள்ளத்தாக்கு பகுதியின் இறையாண்மை எப்போதும் சீனாவுக்கு சொந்தமானது. இப்போது நடந்த சம்பவத்திற்கு சீனாவை குறைகூற முடியாது. இந்தியா தனது முன்கள துருப்புக்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அத்துமீறல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்’ என்றும் அவர் கூறினார்.

malaimalar