வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், மக்களிடையே அரசியல் மற்றும் அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் ஆகிய விஷயங்களில், போதிய ஆர்வம் இல்லாத சூழல் நிலவுகிறது.
அமெரிக்காவில், வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். வழக்கமாக அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே, மக்களிடம் தேர்தல் பற்றிய ஆர்வம் அதிகரித்து விடும். ஆனால், இந்தாண்டு கொரோனா பீதி காரணமாக, போதிய ஆர்வம் இல்லை.உலகிலேயே கொரோனா வைரசால் அதிக பாதிப்புக்கு உள்ளான நாடாக, அமெரிக்கா உள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதையே தவிர்க்கின்றனர்.ஷாப்பிங் மால், ஓட்டல், சுற்றுலா தலங்கள் ஆகியவை மீண்டும் செயல்படத் துவங்கினாலும், மக்கள், அங்கு வருவதற்கு பயப்படுகின்றனர்.
இந்த தாக்கம் தான், சமீபத்தில் நடந்த டொனால்டு டிரம்ப் பிரசாரத்திலும் எதிரொலித்தது. ஓக்லஹாமா மாகாணத்தின் துல்சா நகரில், சமீபத்தில் டொனால்டு டிரம்ப் பிரசாரத்தை துவக்கினார். இதில், பிரமாண்ட கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால், வைரஸ் பீதி காரணமாக, 19 ஆயிரம் பேர் அமரும் அரங்கில், சில ஆயிரம் பேர் மட்டுமே இருந்தனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன; இது, டிரம்பிற்கு மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எதிர்க்கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பிரசார கூட்டங்களுக்கும் மக்கள் பெரிய அளவில் கூடுவதற்கு வாய்ப்பு இல்லை என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலிலும், இறந்தோர் பட்டியலிலும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது; இதன் தாக்கம், அமெரிக்க மக்களிடையே அடுத்த சில மாதங்களுக்கு எதிரொலிக்கும். இதனால், பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். அரசியல் கட்சியினரின் பிரசாரத்துக்கு பெரிய அளவில் மக்களிடையே ஆர்வம் இல்லை.சமீபகாலமாக அமெரிக்காவில் நடக்கும் இனவெறி எதிர்ப்பு போராட்டங்களும், டிரம்பின் பிரசார கூட்டம் பிசுபிசுத்ததற்கு முக்கிய காரணமாக அமைத்து விட்டது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியர்கள் ஓட்டு, பிடனுக்கு?
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், அமெரிக்க செனட் உறுப்பினரான டெட் காவ்ப்மான் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளார்.அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால், அவரது நிர்வாகத்தில் யார் யாரை அதிகாரிகளாக நியமிப்பது என்பதற்கான வியூகத்தை, இந்த குழுவினர் வகுத்துக் கொடுப்பர்.இந்த குழுவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ராகவனும் இடம் பிடித்துள்ளார். ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, கவுதம் ராகவன், வெள்ளை மாளிகையில் முக்கிய பதவியில் இருந்தார்.கவுதம் ராகவன், இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதன் மூலம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் ஆதரவு, அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு கணிசமாக கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
dinamalar