ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ்
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வேதனையுடன் கூறினார்.
நியுயார்க்: சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 6 மாத காலத்தில் ஏறத்தாழ 200 நாடுகளில் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகமெங்கும் 92 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளது; 4¾ லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் தினமும் உயர்ந்து கொண்டே போகிறது.
கொரோனா தொற்று பரவலின் தொடக்கத்தில் இருந்தே, இது இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் எழுந்துள்ள மிகப்பெரிய சர்வதேச சவால் என்றும், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்காக நாடுகளிடையே உலகளாவிய போர் நிறுத்தம் வேண்டும் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு பதில் பெரிய அளவில் வரவில்லை.
அவரும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோமும் கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பிரபல செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் தொடங்கியது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கு நகர்ந்தது. பின்னர் அங்கிருந்து வட அமெரிக்காவுக்கு போனது. தற்போது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலும் பரவி வருகிறது.
இப்போது எந்த கணத்திலும் கொரோனாவின் இரண்டாவது அலை வரும் என சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு இல்லை. நாடுகள் ஒன்றைப் புரிந்து கொள்வது முக்கியம். கொரோனா வைரசுக்கு எதிராக நாடுகள் ஒருங்கிணைந்து போரிடுவது மட்டுமல்ல, சிகிச்சைகள், பரிசோதனை வழிமுறைகள், தடுப்பூசிகளை அனைவருக்கும் கிடைக்கச்செய்தல் என எல்லாவற்றிலும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுதான் கொரோனா வைரஸ் தொற்று நோயை நாம் தோற்கடிப்பதற்கான வழி ஆகும்.
வேலை இழப்புகள், வன்முறைகள், மனித உரிமைகள் மீறல் போன்ற கொரோனா வைரஸ் தொற்றின் விளைவுகளில் இருந்து மீண்டு வருவதற்கும், தொற்று நோயின் தாக்கத்தை குறைப்பதற்கும் அரசியல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அவசியம்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு இல்லை என்பதில் நான் விரக்தி அடைகிறேன். ஆனால், புதிய தலைமுறையினர் எதிர்காலத்தில் விஷயங்களை மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.
நாம் மனத்தாழ்மையை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று கருதுகிறேன். ஏனென்றால், மனத்தாழ்மை இருந்தால்தான் நாம் வாய்ப்புகளை புரிந்து கொள்வோம். ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருக்க வேண்டியதின் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள். சமுகத்தில் ஒரு மகத்தான ஒன்றுமை இயக்கத்தை நான் பார்க்கிறேன்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, மக்களின் தடுப்பூசியாக இருக்க வேண்டும், அது பணக்காரர்களுக்கு நன்மை செய்யவும், ஏழைகளுக்கு நன்மை செய்ய முடியாமலும் நாடுகளுக்கிடையேயான வணிக மோதலாகவும் உருவெடுக்கக்கூடாது என்ற குரல் சமூகத்தில் எழுந்து இருக்கிறது.
இளைய தலைமுறையினரின் குரலை நான் கேட்கும்போது, சிவில் சமூகத்தின் குரலை நான் கேட்கிறபோது, எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்று நோய்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பில் அளவீடு செய்யும் விதைகளை நான் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
malaimalar