சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை

இஸ்லாமாபாத்; ‘சீனாவிடம் இருந்து ஒதுங்கியிருந்தால், உலக நாடுகளின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம்’ என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இதில், சீனா மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதற்கு, பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.’கொரோனா’ வைரஸ் பரவல் விவகாரத்தில், ஏற்கனவே சீனா மீது பல நாடுகள் அதிருப்தியில் உள்ளன.தற்போது வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையில் சீனா இறங்கியுள்ளதற்கு, பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. மக்கள் அதிருப்திஇது குறித்து, பாகிஸ்தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சீனாவுடன், பாகிஸ்தான் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டுள்ளது. தற்போது, இந்தியா – சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னையில், சீனாவுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் கருத்து தெரிவித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தற்போது இந்தியா உடனான மோதலில், சீனாவுக்கு பல உலக நாடுகள், கண்டனம் தெரிவித்துள்ளன. சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.சமீபத்தில், பாகிஸ்தான் விமானங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. சீனாவுடனான நட்பே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

அதனால், சீனாவுடனான உறவு குறித்த கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதைத் தவிர, சீனா – பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில், சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல், சீனாவில் இருந்தே ஆட்களை அழைத்து வந்துள்ளது.இது, பலுாசிஸ்தான், கில்ஜித் பலூசிஸ்தான் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சிறுபான்மையினரான உல்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா செயல்பட்டு வருகிறது. இதுவும் மத ரீதியில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்தியாவில் எல்லையை ஆக்கிரமிக்க முயலும் சீனா, நாளை பாகிஸ்தானிலும் இதே போல செயல்படும் அபாயம் உள்ளது. அதனால், சீன உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சீனாவுடன் சேர்த்து, நம்மையும் தனிமைப்படுத்திவிடுவர் என, இம்ரான் கானுக்கு, வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

dinamalar