ஜைட் இப்ராகிம் இப்போது பக்கத்தானை ஆதரிக்கிறார்

சமீபத்தில் முடிவுற்ற அம்னோ பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஆவேசமான உரைகளால் நம்பிக்கை இழந்த கித்தா (Parti Kesejahteraan Insan Tanah Air) அதன் ஆதரவை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க தீர்மானித்துள்ளது.

பொதுத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த கித்தா “ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக” எதிரணியின் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

“எதிரணி வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பை போட்டியிடுவது பாதிக்கும் என்றால் கித்தா அதன் வேட்பாளரை நிறுத்தாது”, என்று அக்கட்சியின் தலைவர் ஜைட் இப்ராகிம் உறுதியளித்தார்.

முன்னதாக, அவர் பெட்டாலிங் ஜெயா உத்தாரா அல்லது பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. அத்தொகுதிகள் தற்போது முறையே டிஎபி மற்றும் பிகேஆர் வசம் உள்ளன.

கடந்த வாரம் ஐந்து நாள்கள் நடந்த அம்னோ பேரவைக் கூட்டத்தில் அம்னோ தலைவர்கள் பக்கத்தானை குறிவைத்து ஆற்றிய உரைகள் “தேசிய அரசியலில் ஆபத்தான போக்கிற்கு முன்னறிவிப்பாக இருந்தன”, என்று முன்னாள் சட்ட அமைச்சரான அவர் கூறினார்.

“இந்த அறிக்கைகள் வருத்தத்திற்குரியதோடு கவலையளிப்பதுமாகும்.

“டிஎபி ஓர் ‘இனவாத’ கட்சி என்று முத்திரைக் குத்தப்பட்டுள்ளது. எதிரணியிலுள்ள மலாய்க்காரர்கள் சீனர்களின் பணியாளர்கள் என்று வர்ணிக்கப்பட்டனர்.

“எதிரணியினர் வெற்றி பெற்றால், நாடு குடியரசாகும் என்றும் மலாய்க்காரர்கள் அவர்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் இழந்துவிடுவர் என்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன”, என்று ஜைட் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நஜிப்பின் சீர்திருத்தக் கொள்கைகளை முன்மொழிந்தவரான ஜைட், அவசரகாலச் சட்டங்கள், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் போன்றவை அகற்றப்படும் என்று செப்டெம்பர் 15 இல் பிரதமர் நஜிப் செய்திருந்த அறிவிப்பை ஆதரித்தார்.

அதற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கித்தா தலைவர் ஜைட் நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அம்னோ பேரவையில் உரையாற்றுகையில் பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் எதிரணியான பக்கத்தானை கடுமையாக தாக்கினார். பாஸ் கட்சியை “முட்டாள்” என்றும் டிஎபி அக்கட்சியை பயன்படுத்திக்கொள்கிறது என்றும் கூறினார்.

சீனர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கட்சியான டிஎபியை குறிவைத்து தாக்கிய பிரதமரின் கருத்து “ஆபத்தானதும் பொறுப்பற்றதுமாகும்” என்று கூறிய ஜைட், அது அச்சமூகத்தை மேலும் ஒதுக்கிவிடும். 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அச்சமூகம் பெருமளவில் எதிரணியை ஆதரித்திருந்தது என்றார்.

“தன்னிறைவான மற்றும் தன் முழுமையான அச்சமூகத்தை (அது) எதுவும் செய்யாது. (ஆனால்) அது அவர்களை (சீனர்களை) காயப்படுத்தும்.

“மாறாக, பாதிக்கப்படுபவர்கள் மலாய்க்காரர்கள்தான். ஏனென்றால் தங்களை வழிநடத்தும் என்று அவர்கள் நம்பிய கட்சி அவர்களுக்கு அளிப்பதற்கு வெறும் கட்டுப்பாடற்ற வாய்வீச்சைத்தான் வைத்திருக்கிறது. நாட்டின் பிரச்னைகளுக்கு நேர்மையான தீர்வுகளைக் காண மலாய்க்காரர்கள் காத்திருக்கிறார்கள்”, என்றார் ஜைட்.

தியாகம் தேவை

“மலேசிய மக்களுடனான எங்களுடைய ஒருமைப்பாடு, பாசிச மற்றும் ஆட்சி ஆதிக்க கொள்கைகளை நாங்கள் நிராகரித்திருப்பது  ஆகியவற்றை வெளிப்படுத்த, கித்தா உண்மையான மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையில் எதிரணியின் திட்டத்தைத் தொடர்ந்து ஆதரிக்கும் என்று மீண்டும் அறிவிக்க விரும்புகிறது”, என்று ஜைட் கூறினார்.

இனவாத சாயலுடன் விடுக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான உரைகள் சமுதாயத்திலுள்ள “பயங்கரமான பிளைவுகளை” மேலும் அதிகமாக்கும் என்று அந்த முன்னாள் சட்ட அமைச்சர் கூறினார்.

பொதுத்தேர்தலில் வெற்றி பெற தலைவர்கள் “எந்த விலையும்” கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். நாட்டின் நல்வாழ்வைவிட அதிகாரம் மற்றும் பதவி ஆகியவற்றில் அதிகக் கவனமாக இருக்கிறார்கள்.

எதிரணியின் பல்வேறு கொள்கைகள் மீதான கித்தாவின் கருத்து வேறுபாடுகள் இன்னும் நிலைநிறுத்தப்பட்ட போதிலும், கூட்டணியின் “குறைபாடுகள் மலேசியாவில் இன நல்லிணக்கத்தை அழித்து விடாது”.

“மாறாக, நாங்கள் மக்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக  எங்களால் இயன்ற வரையில் எதிரணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்போம்.

“நமது நாட்டின் வரலாற்றில் மக்கள் பெரும் தியாகங்கள் புரிவதற்கு ஏற்ற தருணம் இதுதான்.

“தியாகத்தை தானே செய்வதற்கு தயாராக இல்லாவிட்டால், அவ்வாறான தியாகத்தைப் புரியுமாறு கித்தா மற்றவர்களை அழைக்காது”, என்று ஜைட் வலியுறுத்தினார்.

கித்தாவின் சித்தாந்தத்தில் ஒற்றுமை முதன்மையானதாகும். பொதுத்தேர்தலின் போது “மிகச் சிறந்த அளவிலான விளைவுகளை” உறுதி செய்வதற்கு சிறிய கட்சிகளின் அவ்வாறான “தியாகங்கள்” தேவை என்று அவர் மேலும் கூறினார்.

TAGS: